சன்னல்கள் கிறீச்சிடுகிறது
சன்னல்கள் கிறீச்சிடுகிறது
===========================================ருத்ரா
இரவு
உன் இதயத்தின் கதவுகளை திறக்கிறது.
சொல்லாத உன் சொற்களை
கொட்டிக்கவிழ்க்கிறது.
உம் கொட்டியதை தவிர
அந்த சிப்பிகள் வேறென்ன செய்தன?
பேச்சு என்பது
முத்துக்களை விதைத்து
முத்துக்களை அறுவடை செய்வது தானே!
உன் இதழ்களில்
ஏன் இந்த கனத்த பூட்டுகள்??
கண்களை கவிதைத்தொகுதி ஆக்கினாய்.
கூட்டம் கூட்டமாய்
பட்டி மன்ற கூச்சல்கள் கூட கேட்டன!
அந்த உன் இமை படபடப்புகளில்.
ஒற்றையா ? ரெட்டையா? விளையாட்டுபோல்
வாதங்களை
சோழிகளாய் போட்டு குலுக்கினாய்!
காதல் என்பது எது வரை?
ஆரம்பமே முடிவு எனும்
அர்த்தம் கொண்ட
புதிர்ச்சொல் தானே அது!
இதைத்தான்
சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தாயா
உன் கண்களில்...
என் கண்களின் இமைகளின் மீது
இரண்டு இமயங்களின் பாரம் அழுத்த
உன்னைக் கனவுக்குள்ளும்
போர்த்திக்கொள்ள முடியவில்லையே!
ஆனாலும்
இந்த இரவு கிறீச்சிடுகிறது.
உன் இதயச்சன்னல்கள்
ஏக்கத்தின் இறுக்கத்தில்
எண்ணெய் போடாத சன்னல்கள் போல்
கிறீச்சிடுகிறது!
================================================