ஹேவிங் ஃபன் ஆ-ஒரு மென்பாருளாளன்

கோப்புக் குவியல்களில்
கடவுச்சொல் நீட்சியில்
சவரம் செய்த பளபளப்பில்
அவனைக் காணலாம்.

டாட் நெட் சியில்
வறட்சி வரும்வரை..

வெளிநாட்டு வியாபாரி
வெளுக்கும் வரை..

அந்நியப்பொருளாதார வீழ்ச்சி
ஏற்படும் வரை..

அவன் வீட்டில்
மைக்ரோ ஓவனுக்கு
பிரச்சனை இல்லை.

கல்லூரிவரை
ஆங்கிலத்திடம்
தோற்றுப்போன அவன்
நுனிநாக்கில் இப்போது
வம்புக்கிழுக்கிறான்.

இ.எம்.ஐ என்பதை
கண்டுப்பிடித்தவனே
அவனோ என்று சிலசமயம்
தோன்றும் எனக்கு..

பணித்திட்டங்கள் சரியாக
வெளியீடு செய்த பின்னர்
ஒவ்வொரு மாதமும்
கண்ணாடி உணவகத்தில்
குழுவோடு உண்பான்.

இந்தப் பூச்சியும்
குண்டாகுமா?
என்பது போல இருந்தவன்.

மேசையில் இருந்து
இப்போது தலை
சில அடிகள் தள்ளியிருக்கிறது.
தொப்பை இடிக்கிறதப்பா.

ஒவ்வொரு மாதக்கடைசியும்
செத்துப் பிழைப்பான் அவன்.

வேகம் வேகம் என்று
மூளைக்குடையும் கட்டளைகள்.

இளைஞனவன் கனவில்
குறியீடுகளின் குவியல்
வந்து வந்துப் போகும்.

ஆங்கிலக் கெட்டவார்த்தைகள்
காதிற்கு புளித்துப் போகும்.

விடிய விடிய அலுவலகம் என
வெந்துப் போவான்.

மேலதிகாரியின் அத்துமீறிய
வசவுகளில் விரைவாக
தட்டச்சு செய்வான்
பணிவிலகல் மின்னஞ்சலை..

அனுப்பு பொத்தானை
அமுக்கும் ஒரு நொடிக்குமுன்
ஒரு அழைப்பு வரும்.

மகனே, தங்கச்சிக்கு
நிச்சயம் கூடி வருது
நகை வாங்க பணம்
தேவைப்படலாம் என்று
அம்மா பேசுவாள்.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு
தட்டச்சு செய்த அஞ்சலை
அப்படியே மாற்றுவான்
கூடுதல் சம்பளம் கேட்டு
விண்ணப்பமாய்.

அவனது ஒரே இலட்சியம்
கடைசி காலங்களையாவது
சொந்த மண்ணோடு
சுத்தமான காற்றோடு
பழைய சோறாேடு
செலவிடவேண்டும்.
--கனா காண்பவன்.

எழுதியவர் : கனா காண்பவன் (7-Apr-15, 9:58 pm)
பார்வை : 57

மேலே