பிரிவு உபசார மடல்

பிரிவு உபசார மடல்...

வீட்டுக் கணக்கு... அலுவலக கணக்கு...
இரண்டிலுமாய் உழன்று... உழன்று...
சரி செய்வதும்... நேர் செய்வதுமாய்...
இருந்த கணக்கில் ஒன்று முடிவடைகிறது....!!

காலம் கூட்டிய வயது கணக்கில்
அலுவலக கணக்கு தீர்வடைகிறது...
முடிவுற்ற கணக்கோடு விடைபெறுதல்கள்
பிழையற்ற கணக்காதலால் புகழாரங்கள்...!!

நாளை முதல் விடியல்கள் எல்லாம்
பறவைகளின் இனிய கீதத்துடன்
ரசிக்கலாம் புலர்காலை பொழுதினை
கதிரவனுக்கு வணக்கங்கள் கூறி...

நேரம் ஆகிவிட்டது... நேரம் ஆகிவிட்டது
அலுவலக புறப்பாடுகளின் போதான
அசரீரி எச்சரிக்கைகளில்
ஓடிய கால்கள் இனி
அலுப்பின்றி நடை பயிலலாம்...

"இந்த கோப்பினை முடிக்க வேண்டும்
அந்த வேலை பாதியில் நிற்கிறதே??"
குழப்பமான சூழ்நிலைகளுக்கும்
ஆரவாரங்களுக்கும்
இன்றோடு முற்றுப் புள்ளிகள்...

இனி வினாக்கள் இல்லா வாழ்க்கையில்
அனைத்தும் விடைகளாய்...
தெளிவான ஓடையாய்
சீரான முதிர்காலங்கள்...!!

வளத்தைப் பெருக்கிய தெய்வம்
வள்ளலாய் வழியனுப்பி வைக்கிறது
"வைத்துக் கொள் இன்னுமாய்
வருங்காலத்திற்கான கொடைகள்" ...!!

மீதமுள்ள காலத்தை
அமைதி பாலத்தில் கடக்கலாம்
ஆரவாரங்கள் அற்ற பாதைகளில் எல்லாம்
மகிழ்ச்சிப் பூக்களின் வரவேற்புகள்
பன்னீர் தெளித்து பரவசமாய்...!!

பணி ஓய்வினை மகிழ்வுடன் ஏற்று
இறைவனின் ஆசிகளுடன்
என்றென்றும் இன்புற்றிருக்க
என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..!!

[குறிப்பு: எங்களது அலுவலகத்தில் கடந்த மாதம்
பணி ஓய்வு பெற்ற பொது மேலாளர் அவர்களுக்கு
எழுதிய பிரிவு உபசார மடல்]

எழுதியவர் : சொ.சாந்தி (9-Apr-15, 10:12 pm)
பார்வை : 35480

மேலே