காதலும் தன்னிரக்கமும் -- தொடர் கட்டுரை -- 02

அப்படியென்றால் நான் தோல்வி மனப்பான்மையோடும், விரக்தியுணர்வோடும் எழுதியதில்லையா என்று என்னையே கேட்டுப் பார்த்துக்கொண்டபொழுது.....கண்டதென்ன?--என்று இக்கட்டுரையின் முதற் பகுதியில் முடித்திருந்தேன். --இனி....

அறுபதுகளிலே எழுதி எழுத்தில் (017) 08-02-2012 அன்று பதிந்து, காண நேர்ந்த கவிதை இது: .

நெஞ்சவலம் உற்ற நிலை !

அற்றதே! சூனியம் ஆனதே! இவ்வுலகம்
இற்றதே! கண்முன் எரியுமே! -நெற்றிமேல்
கூன்பிறையின் ஒப்புமை கூட்டுவாள்! வாராது
தான்மறைந்த காலை தனில் !

விம்மும்! புடைத்தெழும்! வேர்த்திடும்! அன்புளம்
கும்மும்! குமைந்திடும்! கூர்படும்! -தம்முன்
வளைமா வடுச்செவியாள்! வாராது துன்பம்
களையாள் எனஎண்ணுங் கால்!

கத்தும்! கதறிடும்! கன்றிடும்! நெஞ்சமுள்
குத்தும்! குடைந்திடும்! கொன்றிடும்! - முத்தும்
ஒளிசிந்தி முன்நிற்காது ஓடும் நகையாள்!
அளிசிந்தி வாராத தால்!

கூம்பும்! குறுக்கிடும்! குன்றிடும்! எண்ணியுள்
சாம்பும்! சலித்திடும்! சாற்றிடும்! -வீம்பின்
வராஅ திருப்பளோ? வார்குழலி! என்றுஎன்
அறாஅ இடும்பைத்தாம் நெஞ்சு !

எள்ளும்! நகைசெயும்! என்னுடலை நாணம்வந்து
அள்ளும்! அலைத்திடும்! ஆட்கொளும்! -புள்ளும்
பழகும் குரலினாள்! பாராதே என்றுள்
அழுகும் நிலைகண்டு அகம் !
===
இதிலுள்ள சொற்களெல்லாம் பெரும்பாலும் ஈரசைச் சொற்களாகவே வந்து விழுந்துள்ளதைக் கண்டு இன்று நான் இதை இரசிப்படுண்டு.

இது ஏமாற்றம், இயலாமை, சோர்வு போன்ற உணர்வுகள் மேலெழுந்து வந்ததால் எழுந்த பாடல் அன்று. காதலித்தவளை ஆர்வத்துடன் சென்று (தூரத்திலிருந்தேதான்) கண்டு வந்த திருப்தியில் எழுந்த எண்ணம் என்றால் வியப்பாக இல்லையா. இதை விட இதே போன்ற உணர்வு நிலையில், இன்னுமொரு பாடல், என்னுடைய சாவுக்குப்பின் நான் செல்லும் கடைசி ஊர்வலத்தை இரசித்துக் கற்பனை செய்து எழுதிவைத்துள்ளது, இருக்கின்றது; அதை நான் இன்னும் எழுத்தில் பதிவு செய்யவில்லை.

இந்த இடத்தில் திரு. மு.வ. அவர்களின் இலக்கியத் திறன் என்ற கட்டுரையில் படித்ததைச் சொல்ல விழைகிறேன்:
“இலக்கியத்தில் பலவகையான உணர்ச்சிகளும் இடம்
பெறுகின்றன, எனினும், மகிழ்ச்சி, வேடிக்கை, கவலையற்ற மன
நிறைவு முதலியவற்றைவிட, அச்சம், துயரம், கவலை முதலிய
உணர்ச்சிகளை உடைய இலக்கியம் விரும்பிப் படிக்கப்படுகிறது.*
ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்களை விடத் துன்பியல்
நாடகங்கள் மிகப் போற்றப்படுகின்றன. நாடகமேடையில் இன்பக்
காட்சிகளைவிடத் துன்பக் காட்சிகளைக் காணும்போது, மக்கள்
உள்ளம் ஒன்றியவராய் உள்ளனர். காரணம் என்ன? கலைஞரின்
உள்ளம், அச்சம் துயரம் முதலிய உணர்ச்சிகளால் பெரிதும்
தாக்குண்டு ஆழ்ந்து உணரும் நிலை எய்துகிறது. அவர்கள்
படைக்கும் கலைகளிலும் அந்த உணர்ச்சிகள் ஆழமும் ஆற்றலும
உடையனவாக அமைகின்றன.”
“துன்ப உணர்ச்சிகளிலும் எல்லாத் துன்பமும் கலைக்கு உரிய
ஆழமும் ஆற்றலும் பெறுவதில்லை.எடுத்துக்காட்டாக, எழுபது வயது
உள்ள முதியவன் ஒருவன் நோய் வாய்ப்பட்டு மாண்டான் என்றால்,
அந்தத் துன்ப உணர்ச்சியைப் புலவர் ஒருவர் பாட்டில் பாடி
வாழ்வித்தல் இயலாது. ஆயின், முதுமையுற்றவனாயினும் தசரத
மன்னன் தன் மகனது பிரிவாற்றாத் துயரத்தால் மாண்டதை
வால்மீகியும் கம்பரும் தம் பாட்டுகளால் பாடி அத்துன்ப
உணர்ச்சிக்கு நிலையான வடிவம் தந்துள்ளனர். தசரதன் தன்
முதுமையில் நோயுற்று மாண்டிருந்தால், அப் பிரிவு பற்றிப் புலவர்
அவ்வாறு பாடியிருக்க முடியாது. எதிர்பாராத காரணத்தால் நேர்ந்த
ஏமாற்றமும் ஆற்றாமையும் அவனுயிரைக் கொண்டமையால்தான்,
அவ்வாறு புலவர் பாடமுடிந்தது. “

பாட்டில் உணர்ச்சியை அமைக்கும் புலவர், பாட்டின் வடிவத்திலும் அமைக்கலாம்; அல்லது பாட்டின் பொருளிலும் அமைக்கலாம், என்றும்,“ பாட்டின் சொற்
பொருளிலும் கருத்திலும் உணர்ச்சியை அமைத்தலே, அதன்
வடிவத்தில் அமைத்தலை விடச் சிறந்தது என்பர் அறிஞர்.”என்றும் கூறும் மு.வ அவர்கள் அதே சமயம், “ உணர்ச்சி பாட்டின் வடிவத்திலும் பொருளிலும் ஒருங்கே புலப்படுமாறு அமைந்த பாட்டே சிறப்புடையது ஆகும்.” என்று கூறுவதோடு அதற்கொரு எடுத்துக்காட்டாக தேசிக விநாயகம் பிள்ளை பாடியுள்ள
கீழ்காணும் பாடலைப் பதிவு செய்துள்ளர்:

“ வாய்முத்தம் தாராமல்
மழலையுரை யாடாமல்
சேய்கிடத்தல் கண்டெனக்குச்
சிந்தைதடு மாறுதையா
முகம்பார்த்துப் பேசாமல்
முலைப்பாலும் உண்ணாமல்
மகன்கிடக்கும் கிடைகண்டு
மனம்பொறுக்கு தில்லைஐயா.
நீடும் மதியினைப்போல்
நிலவெறிக்கும் செல்வமுகம்
வாடிநிறம் மாறியதென்
வயிற்றில்எரி மூட்டுதையா.
பின்னி முடிச்சிடம்மா
பிச்சிப்பூச் சூட்டிடம்மா’
என்னும் மொழிகள்இனி
எக்காலம் கேட்பன்ஐயா
நெஞ்சில் கவலையெல்லாம்
நிற்காமல் ஓட்டும் அந்தப்
புஞ்சிரிப்பைக் காணாது
புத்திதடு மாறுதையா* “

இப்பாடலையும் அதிற்காணும் உணர்ச்சியையும் பார்க்கும்பொழுது சில மாதங்களுக்கு முன்னர் திரு பிரபாகரனின் மகனின் போட்டொவைக் கண்டு மனதுள் அழுத பலரின் எண்ணங்களும் நமக்குள் வராமல் போகாது என்று நம்புகிறேன். -------இன்னும் வரும்;

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (10-Apr-15, 7:52 pm)
பார்வை : 103

சிறந்த கட்டுரைகள்

மேலே