காதல் வெற்றிக் கொடிக் கட்டட்டும்
ஞாபக விதைகளால்
மனசுக்குள் முளைத்த
காதல் பூங்கொடியின்
கபடமற்ற வேர்கள்
உயிரெங்கும் பரவி
வியாபித்த தருணத்தில்
மறந்து போ என்று
நீ தெளித்த வார்த்தை
நாசினியால்
இறந்து போன என்னை
உனக்குத் தெரியாது
நினைப்பதற்கு மறந்துபோன
உன்னை மறப்பதற்கு
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை மறந்து
வாழ்வதாக நினைக்கத் தெரிந்த
உன் நினைவிடத்தில் கொஞ்சம்
என்னை நினைத்து வாழச் சொல்லி
நினைவூட்டி வை
மறந்ததை யோசித்து யோசித்து
நினைவுக்கு கொண்டுவரும்
முயற்சிகளின் வெற்றியைப்போல்
நினைத்ததை நினைத்ததும்
மறந்துவிட்டு வாழ்தல் என்பது
தோல்விகளில் கைக்கூடுவதில்லை
கூட்டைத் திறந்து
வெளியேற விட்டபோதும்
பழக்கத்தோசத்தால்
கூட்டைச் சுற்றியே வட்டமிடும்
ஞாபகப் பறவை என்பது
ஒரு சோதிடக் கிளியைப்போலத்தான்
பிரிந்தபின்னும்
தையல் போட்டுக்
குணப்படுத்தும் காயங்களைபோல
பிரிந்த பின்னே
மையல் விட்டு
மனம்மாற்றும் மாயங்கள்
காதல் மருத்துவத்தில் இல்லை
வேதனையே மருந்தாகிக் கிடக்கும்
விசித்திரமாய் நீ
உன் இதயத்திற்குள் புகும்
விழிகளின் வழிகளில்
ஏற்றிவைத்த சிவப்புக் கொடியை
அகற்றிவிட்டு
ஒரு பச்சைக் கொடியை பறக்கவிடு
மரணப்படுக்கையில் கிடக்கும்
இந்தக் காதலுக்கு ஒரு
வெற்றிக் கொடிகட்டட்டும்.
*மெய்யன் நடராஜ்
(எண்பதுகளின் இறுதியில் பத்திரிகைக்கு எழுதிய கவிதை.)