இடைவெளியின் இடைவிடா தவிப்புகள்----அஹமது அலி-----

அப்பாவியாய் காற்றிலலையும்
சவர்க்காரக் குமிழானேன்
உள்ளிருந்து பார்க்கிறேன்
வெளியிலெங்குமுன் பிம்பம்
வெளியிலிருந்து பார்க்கிறேன்
உள்ளெங்கும் நானே உன் நானே!
-0-
குளுகுளு குமிழுக்குள்ளும்
உன் நினைவுப் புழுக்கம்
சோகத்தால் வியர்த்துக் கொட்டுதடி
உன்னைக் காணாத தாபத்தால்
ஏக்கங்கள் தூபமிட்டு தூபமிட்டு
துக்கச் சிறகுகள் முளைக்குதடி!
-0-
குமிழ்க் கதவு மிக மெல்லியது
திறக்கும் சாவியோ உன்னிடமுள்ளது
பொருள் கொண்டு உடைத்தால்
பொருள் படுமா? இது தகுமா?
அருள் கொண்டு திற அன்பு மடை
இருள் வானத்தை விடியலில் துடை!
-0-
கண்டபடி சுரக்கும் காதல் ஹார்மோன்கள்
கண்டு படிப்பதும் உன் மோகனங்கள்
பல்லில்லாத எறும்புகள் கடிப்பது எங்கனம்?-நீ
சொல்லாத சொல்லில் துடிப்பது அங்கனம்!
-0-
கண்வெட்டின் மின்வெட்டில்
கல்வெட்டாய் பதிந்த நேசம்
தமிழ்நாட்டின் மின்வெட்டாய்
தறி கெட்டுப் போனதும் ஏன்?
-0-
சங்கேத மொழியறியுமுன்
சமயோசித சாமர்த்தியங்கள்
சஞ்சல மொழியின் வலியறியாது
சங்காத்தம் மறந்ததெப்படி?
-0-
பருப் பொருளில் அணுவே சிறியது
கருப்பொருளில் காதல் வலியது
அணு வெடிக்க தாங்காது பூமி
அனுசரணை கொள்ளாயோ தோழி!
-0-
கரைக்கும் கடலுக்குமான
கட்டு மரத்தின் பிரிவை
துடுப்பின் விசையே நிர்ணயிக்கும்
துடுப்பை இழந்த போதோ
காற்றின் திசை நிர்ணயிக்கும்
துடுப்பிழந்து துடிப்பிழந்து
காற்றுக்காக காத்திருக்கிறது நம் பிரிவு!
-0-
இறந்த உடலில் ஸ்டெம் செல்கள்
குழந்தை உண்டாக்க போதுமாம்
விஞ்ஞானம் பேசுகிறது
நீ இல்லாத போதும்
நம் காதல் பிறந்து கொண்டேயிருக்க
நினைவுகள் போதுமே!
-0-
இடை வெளியிலும் இடைவெளி
இருத்தலாகாது என்பவன் நான்
இடைவெளி தந்து இடர் படச் செய்து
மொத்த எடையையும்
சுழியமாக்கிய சூனியக்காரி நீ!
-0-
இடைவெளியின் தவிப்புகள்
சகாராவில் சுட்டெரித்து
நயாகராவில் துவைத்தெடுத்து
எரிமலையில் குளிக்க வைத்து
ஏகாந்த முள் கொண்டு துவட்டி விடுகிறது!
-0-
சூரியனுக்கு அருகிருந்து
புதன் வாடுகிறது
சூரியனை தொலைவில் கண்டு
தாமரை மலர்கிறது
நீ அருகிருக்க நான் தாமரை
நீ தொலைவிலிருக்க நான் புதன்!
-0-
இத்யாதி ! இத்யாதி!!

பரிவற்ற பிரிவு ஆவி கருக்க
ஆக்கை வதைத்து ஆயுளைச் சுருக்க
மிச்சப் பிரியங்கள் உனக்குள் துளிர்த்து
இடைவெளிகள் சுருங்கிப் போனது
ஈர்ப்பு விசை இணைத்துக் கொண்டது
இன்பம் இன்பம் எங்கும் நிறைந்து நிலவுது!
-0-
இனியொரு இடைவெளியை இதோ
நீ தருமுன் இன்பங்களை சுவாசிக்கிறேன்
இந்த இன்ப சுவாசம் போதும் போதும்
யுகம் யுகம் மட்டுமல்ல என் தோழியே
இப்பிறப்பிற்கு மொத்தமும் தான்!

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (16-Apr-15, 1:01 pm)
பார்வை : 145

மேலே