மெளவுன தாக மடிப்புகள் - தேன்மொழியன்

மெளவுன தாக மடிப்புகள்
~~~~~~~~~~~~~~~~~~

உறங்கிய ஊமத்தப்பூவின்
உயிரை உள்ளிழுத்து ஊதும்
பாறை மோதிய முகமொன்றில்
முத்த முத்திரைக் கசிகிறது ..

வருடிய வாய்நுனியில்
வற்றிய தேன்துளியென
நெற்றித் தழுவிய நிஜமாக
தேக நித்திரை அவிழ்கிறது ....

பருகிய பாதங்களில்
உருட்டிய மயக்கமென
இதழ் இறுகிய ஈரமாக
இரவின் தீண்டல் திரள்கிறது ..

விலகிய விரல்களில்
உதிரும் புதையலென
நாணம் நழுவிய நகமாக
மெளவுன தாகம் முளைக்கிறது...

ஊடுருவிய உடல்களில்
துயிலாத கர்வமென
புலன் புலம்பிய புதிராக
காதலின் வேகம் கலைகிறது ...

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (16-Apr-15, 8:19 pm)
பார்வை : 136

மேலே