ஒரு சிவப்பு விளக்கின் மின் மினிக் கனவு

சாமப் பந்தியிலமர்ந்து
சதை விருந்துண்ண
வந்தவர்களுக்கு மத்தியில்
விருப்பமற்ற
என் அங்கப் பரிமாறுதலின்
ஆதங்கப் பரிதாபம்
கேட்டவன் நீ ...

வீட்டடுப்பெரிய
எரியுமென் தேக
யாக வெக்கையின்
தியாகத் திரிபிரித்து
ஆற்றாமையின்
அகல் பற்றியெரிந்த
இத் தெருவிளக்கை
நோக்கி வந்த
விட்டில் பூச்சிகளுக்கு
நடுவே
என் விதியிருளில்
எனக்குள் ஒளிர்ந்த
ஒரேயொரு
மின் மினிப் பூச்சியே
நீ எப்படி இங்குற்றாய் ?

ஒரு நாள்
அழுகிப் போகுமிந்த
சதைப் பழத்தை கொத்த வந்த
காமக் கழுகுகளுக்கிடையே
என் சோகச் சீட்டெடுத்து
எனது இறந்த காலக்
குறி பார்த்த
அதிசய ஆண் கிளி நீ ...
நீ தந்த
நெல்மணிகளை
என்னிதயப் பத்தாயத்தில்
சேமித்திருக்கிறேன்
உன்னை
எடுத்தெடுத்து அசைபோடுகையில்
நான்
பரிசுத்தமாகி பரிசுத்தமாகி
பாவியாகிறேன்
நீ யார் ? .... என் பரமபிதாவா ?

பளபளக்கும்
என் பாவ மேனியின்
பக்கங்களை கசக்கிப்
புரட்டியவர்களுக்கு மத்தியில் -
கேட்டு வாங்கி வந்த
வரமல்ல இது
கெட்டொழிந்து
உடல் விற்கும்
சாபம் பெற்றுப்
பிறந்திட்ட என் கதையின்
சோக பக்கங்களை
விரல் நுனியும் படாது
முழுதாய் புரட்டியவன்
நீ யார் ? ... எழுத்தானா ?

வீணைக்காக
வெட்டப்பட்டு
வெட்டப்பட்டு
விரக தாபம் தீர்த்தே
வீணாகிப் போன
இந்த விறகினை
போதி மரமென்றவனே...
நீயெனது
சித்தார்த்தனா ?

வாழ்வின் கஜானாவில்
எவன் வேண்டுமானாலும்
புழங்கும்
நானொரு செல்லாக்காசு
எனது உண்டியல் முழுவதும்
பாவங்கள் ...
இது வரை
எனது படுக்கையை
பகிர்ந்து கொண்ட
எவனாலும் எனது
இதயத்தின் முற்றத்தைக் கூட
தாண்ட முடிந்ததில்லை
ஆனால் -
நீயோயெனது
கர்ப்பக் கருவறையில்
கற்பூரமென எரிகிறாயே
நீ யார் ?

ஊனமுற்ற அக்காவை
பரிசாய்க் கொடுத்து விட்டு
பெற்றவள் கண்மூட
பின் வந்த சிற்றன்னை
பிரம்பினால் கதை பேச
பெற்றெடுத்த தந்தையோ
மகளென்று கூட பாராது
தரகனாய் நிலை மாற
அக்காவோடு வெளியேறி
பசி வயிறு கிழிக்க
அடைக்கலம் சேர்ந்தயிடம்
குருதிவண்ண விளக்கெரியும்
பரி தாபத் திருக்கூடம் ............
அங்கு நேற்றிரவு
எதைத்தேடி என்னிடம் வந்தாய் ?
என்ன வேண்டி
என் கண்ணொளியுற்றாய் ?

இனியொரு முறை
என்றேனும்
நீ
திரும்பி வந்தால் ...
இதயம் மூடி
உடல் திறந்து
நான் கிடந்த
கணக்கற்ற இரவுகளை
சிதையிலேற்றி
முதன் முதலாய்
என் முதலிரவிற்கென
என்னிதயம் திறந்து
உடல்மூடிக்
காத்திருப்பேன் .

எழுதியவர் : பாலா (16-Apr-15, 8:30 pm)
பார்வை : 209

புதிய படைப்புகள்

மேலே