எலியாட்டிகள் - கே-எஸ்-கலை

எலியாட்டிகள் -  கே-எஸ்-கலை

நாசா முதல்
நாசமாய்ப் போனவன் வரை
ஆட்டிக் கொண்டிருக்க
ஆசைப்படுவது
இந்த எலிகளைத் தான்....

காலை எழுந்தவுடன்
கணினி...
பின்பு கனிவு கொடுப்பதும்
கணினி...
மாலை முவுவதும்
கணினி....
நடுச் சாமம் தாண்டியும்
கணினி
என்று மழுங்கிக் கிடப்பதைக்
கவனி !

தெரிந்தோ...தெரியாமலோ...
ஆட்ட வேண்டியது
கடமையென்ற கோணத்தில்
ஆட்டத் தொடங்கிவிடுகிறார்கள்...

விவஸ்தைக் கெட்டவன்
வீணே ஆட்டிக் கொண்டிருக்க
அவஸ்தைப் பட்டு
ஆட்டம் காண்கிறது
அகிலத்தின் அத்திவாரம் !

எவன் ஏர் பிடிக்க வேண்டுமோ....
அவன் தான் ஏர் பிடிக்க வேண்டும்
என்பதில் உறுதியாய்
இருக்கத் தெரிந்த உலகத்திற்கு...
எவன் எலியாட்ட வேண்டுமோ...
அவன் தான் எலியாட்ட வேண்டுமென
சட்டமிட வழியில்லையே....!

எலியாட்டிகளின் தோட்டத்தில்
மரங்கள் நிறையவே உண்டு....
காய்களுக்கும் பஞ்சமில்லை....
விதைகளைத் தான் காணவில்லை !

எலியாட்டிகளின் பிள்ளைகள்
விறகுகளைத் தின்ன
சபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் !

காகிதம் முதல்
கணினி வரை
மலை மலையாய் குவிகிறது
மக்கிப் போகாத
மலட்டுக் குப்பைகள் !

எலியாட்டல் என்பது
சோம்பேறிகளுக்கு
தவமின்றி கிடைத்த வரம் !

கொஞ்சம் வேர்வையோடு கலந்து
வலியும் களைப்பும் வந்தால்
எலியாட்டிகள் எத்தனைப் பேர்
எலியாட்டுவார்கள் ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (17-Apr-15, 9:12 am)
பார்வை : 87

மேலே