பெண் பார்க்கும் படலம் -Mano Red

எப்போதும் போலவே
அன்றும் விடிந்தது,
அவளுக்கும்
அழுகை வந்தது,
எப்போதும் போலவே
பெண் பார்க்கும் படலம்
அன்றும் அலுத்து விடுமோ..??

ஏழு பேர் வந்து போனது போலவே
எட்டாவதாக வருபவனும்
எட்டாமல் போய் விடுவானோ..??
யாருக்கென்ன கவலை
காயப்போவது
மல்லிகைப்பூ மட்டுமல்ல
அவளும் தானே...?!

அலங்கரித்து
சிங்காரமாய் நடந்து வர
இது முதல் தடவை அல்லவே,
தனக்கு தானே கேட்டுக் கொண்டு
ஏனோதானோவென வந்தாள்..!!
வழக்கமான
வணக்க அரங்கேற்றத்தை
அன்றும் அரங்கேற்றினாள்..!!

வந்த அத்தனை பேரும்
நிலம் பார்த்தனர்
நகை பார்த்தனர்,
வீடு பார்த்தனர்,
வசதி பார்த்தனர்,
திருமணத்திற்காக பெண் பார்க்க
யாரும் வரவில்லை..!!

புண்ணைக் கொத்தும் காக்கைகளுக்கு
மாட்டின் நோவு
எப்படித் தெரியும்.??
வெத்தலையின் காம்புடன்
பெண்ணின் குறைகளையும்
கிள்ளி எறிந்து பேசினார்கள்..!!

மாடு விலை பேசும்
வியாபார (திருமண) சந்தையில்
பெண் மட்டும் என்ன பாம்பா..??
பல்லைப் பிடித்து பார்க்கையில்
கையில் கொட்டுவதற்கு..!!

நிராகரிப்பு என்பது
நிர்வாண நிலையினும் கொடிது..!!
காயா இல்லை பழமா
என்று அவர்கள் கேட்பதிலே
காய்ந்த பழமாகி விடுகிறாள்..!!

சினிமாவிற்கு வந்தது போல
சிற்றுண்டியுடன்
நேரத்தை போக்கிவிட்டு
வியாபாரிகள் வெளியே போனார்கள்,
கதவோரம் சாய்ந்து நின்று
அவள் சொன்னாள்,
அடுத்த முறையாவது
பெண் என்னைப் பார்க்க வாருங்கள்..!!

எழுதியவர் : மனோ ரெட் (19-Apr-15, 10:30 am)
பார்வை : 602

மேலே