தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
ஒங் காதுல ஈயத்தக் காச்சி
ஊத்த..... வாடி....
பேத்திக்கு பேன் பார்த்துவிட
அழைத்துக் கொண்டிருந்தாள்
பாட்டி....
கரும்பு இரும்பு கணக்கா
வந்திருக்கண்ணே..
கணுக்கால் சேறு கழுவிக்கொண்டே
காலைச் சோறுக்கு
வந்திருந்தார் சித்தப்பா.....
செப்புக் கொடத்துல
சின்ன இடுப்புல.... வாய்க்காலோரம்
சிலேடைபாடி
வம்பளத்திருந்தான் முறைமாமன்..
அம்மாடி.... அந்த
வெங்கல வெளக்க ஏத்துடா...
புதுமணப் பெண்ணிற்கு
கனிவாய்ச் சொல்லிகொண்டிருந்தார்
தாய்மாமன்...
முற்றத்துப் பத்தாயத்தில்
எப்பொழுதும்
மஞ்சளாய் நிறைந்திருக்கும்
நெல்லுமணி...
வளமாகவே வாழ்ந்திருந்தோம்
அட்சய திரிதியை
இல்லா நாட்களிலும்...