பிரிந்ததேனடி என்னை விட்டு
வெட்டியானாய்,
பிறந்திட்ட
ஒரே
காரணத்தினால்
பெண்ணையே
ஏறிட்டுப்
பார்த்ததில்லை!
எங்கே,
என் பிள்ளையும் ,
என்னைப்போல
மாறிடுவானோ
என்றெண்ணி ..,..
ஓர் நாள்
எதேர்ச்சையாக
உன்
மேலாடையின்
வாசம் தீண்டி
தோற்றேன்
எனக்கே தெரியாமல்
உன்னிடத்தில் ....,
என்
வாசலின்
வாசமறிந்தும்
என்னைத்தொட
நெருங்கிய
முதல் பெண்
நீயடி!
இருந்தும்
உன்னை ஏற்க
மனமில்லையடி
என்
நிலையறிந்து !...
பெற்றோரை
இழந்து தவிக்கும்
உன்னை
விட்டுவிடவும்
மனதில்
இடமில்லையடி !....
எப்போதும்
பிணவாடை
பற்றிகொள்ளும்
என்
உடலுக்கு ,
தேகம் முழுக்க
மணம் விசும்
உன்னைத்
தொட்டு ரசிக்க
தயங்குதடி
மனம் !...
நீ - என்
மனைவியாய்
மாறிய பின்னும் !
நான்
விலகினாலும்
உன்
அரவணைப்புகள்
மட்டுமே - எனக்கு
ஆறுதலாய்
உள்ளதடி
இவ்வுலகில்
நான் வாழ!....
குடிசையில்
வாழ்ந்தாலும்
உன்
குறும்புச்சிரிப்பில்
குடை சாயுதடி
என் மனம் !....
கருத்தரிக்க
வாய்ப்பின்றி
கலங்குவோர்
பலரிருக்க ,
உன்னில்
உதித்திருக்கும்
சிசு - நமக்கு
வேண்டாமடி !.
ஆம்
வேண்டாமடி!..,
பிறந்த
மழலை யாவும்
தவழும் வயதில்
மண் தின்னுமாம் !
இங்கே ,
கால்படும்
இடமெல்லாம்
பிணத்தின்
சாம்பல் தானடி
கலந்துள்ளது
மண்ணில் ........
எவ்வளவோ
எடுத்துரைத்தும்
உன்
பிடிவாதம்
நீங்கியபாடில்லை,
உன்
விருப்பபடியே
அமையட்டும் !...
தன்
கருவைத் தாங்கிடும்
உனக்கு
வேண்டியதைக் கேள்
என்ற
வழக்கமான
கேள்வி தான்
நானும்
கேட்கிறேன்
உன்னிடத்தில் !
தாயானவளே
வேண்டியதைக் கேளடி
என்றேன் !...
நம்
சிசுவை ,
நான்
காணும் முன்னே
நீங்கள் தான்
முதலில் காண
வேண்டுமென்றாய்!..
நானும்
சரியென்று கூறி
தவறிழைத்து
விட்டேனடி !
ஆம் !
மின்னலின்
தாக்கத்தில்
மின்மினிப்பூச்சியாய்
என் மனதை
வலம் வந்த
உன் உடல்
கருகிப்போனதடி
நம்
சிசுவை
சுமந்தபடியே !.....
இதோ ,
நீ
உரைத்த படியே
நம் சிசிவை
நானே
உன்
உடலிலிருந்து
பிரித்து
எடுக்கிறேனடி!...
ஆம் !
உன்
ஆசைப்படியே
நம் சிசுவை
முதலில்
பார்க்கிறேனடி!...
காலம் முழுக்க
என்னோடு தான்
இருப்பேன்
என்றுரைத்த- நீ
உடலால்
பிரிந்ததேனடி
என்னை விட்டு !....
நான்
பிறந்த போது
அழுதேனா
என்று
தெரியவில்லையடி
ஆனால்,
நீ
இறந்தபோது
அழுகிறேனடி!....
இதோ !
விழிகளில்
வழிந்தோடும்
கண்ணீரைத்
துடைத்துக்கொண்டு ,
சிரித்தபடியே
தொடர்கிறேன்
என்
பயணத்தை
இம்மண்ணில்
பைத்தியக்காரனாய்!....
ஆம்
பைத்தியக்காரனாய்!....