மரப்பாச்சிகளின் கூடடைதல்
கதவுகளும் சாளரங்களுமற்று
மூடியே கிடக்கும்
கண்பார்வையற்றவளின்
விழிகளுக்குள்ளே
செவிமடுக்கும் குரல்களின்
தோட்டம்
தனக்குத் தானே
வாசனைகளை நிரப்பிக்கொள்கிறது ...
அவள் கைதொடும்
ஸ்பரிசத்தின் வானவில்கள்
நிறங்களைப் பிரித்து
தங்களுக்கேற்றவாறு
வண்ணங்களை
வரைந்து கொள்ள -
அவளுணரும்
சாமக் காற்றின் குளிர்ச்சி
நிலாக் கிண்ணத்தில்
சந்தனத்தைக் குழைத்து
அவள் கண்களில்
பூசிச் செல்கிறது ...
ஒதுங்க இடமற்ற
அடைமழை நாளில்
மேனி நனைகையில்
மழையின் சத்தம்
படைப்பின் துளிகளால்
அவள் செவியெனும்
விழிகளைச்
சிலிர்க்கச் செய்கையில்
ஒளியற்ற அவள்வனத்தின்
மரப்பாச்சிகள்
ஒலியுருக்கொண்டு
தங்களுக்கான கூடடைந்து
பார்வையற்ற தங்கள்
பறவைகளின்
மூர்ச்சை தெளித்து
அடைகாக்கக்கூடும் .