அப்பாவின் பெயர் குப்பை
எச்சில் குவளைகள்
இரண்டைத் தவறவிட்டிருந்த பொழுதில்
அப்படித்தான் அழைத்தார்
அன்றைய நாளின்
முதலாளியாகியிருந்த அவர்…
நேற்றைய இலைக்கட்டுகள்
சுமந்திருந்த போது.. சரிந்து விட்டிருந்த
நான்கு நுனிஇலைகளுக்காகவும்
அதே விளிகளைத்தான்
கடந்துவர வேண்டியதாகியிருந்தது….
நாளைய மதுக்குப்பிகளின்
சேர்க்கை இத்தனையாக வேண்டுமென
கண்டிப்பாகச் சொன்னவருக்கும்
அது இயல்பாகவே
ஒட்டிக்கொண்டு வந்திருந்தது….
குப்பைகள் கிளறுகையில்
ஆள்காட்டி நடுவிரல்களுக்கிடையே
சிக்கியிருந்த ஆணுறை
அவர்களைப் போல என்னைத்
திட்டியிருக்காது…
அவர்களாகவோ… அவர்களல்லாத யாரோ
பீய்ச்சியிருந்த
திரவணுக்களாக அதனுள் நான்
ஊடுருவியதன் முதற்தொடுகை
பரிவுகளாயிருக்கலாம்….
குப்பிச் சாக்குகளோடு
தெருமுனை கடந்திருக்கையில் …
யார் பெற்ற பிள்ளையோ என
உச்சுக் கொட்டியவனிடம்
கத்திச் சொல்லத் தோன்றியது….
உனக்காகவும் இருக்கலாம்…
தெரியவில்லை….
உறுதியாக நான் தொழிலுக்குப் பிறந்தவன்….
நன்றி : வல்லமை மின்னிதழ்.