டுர்டுர்
எழுபத்தைந்து சதவீதம்
பால்குடி மறந்த பின்
ஒரு நாள் மதிய நேரம்
தொட்டிலாடி சிரித்து
மறைந்து விலகி
நிழலோடு விளையாடிய
உணவுநேரம் என்பதென்ன
அறியவைக்கப் போகும்
சற்று நேரத்திற்கு முன்
கிண்ணத்தில் அப்பி
சோற்றினை மாவாக்கி
சற்றுநேரமென்பது ஒருநொடியாக
அம்மாவின் ஐவிரல்கள்
என் வாயினை நெருங்க
இதுவும் ஒரு புது விளையாட்டென
டுர்டுர் என்றவாறு எச்சில் தெறிக்க
முகம் திருப்பிய உடனே
பசைப்பொட்டென கன்னத்தில்
சோறொட்டிய அக்கணத்தில்
முதல் முறையாய் கேட்டது
அந்த வார்த்தை..
இது என்ன புதுவார்த்தை
உருவமென்ன உருவமிதற்கு
முழித்த விழிகளோடு
அங்குமிங்கும் பார்க்க...
சீவாத தலையும்
சுருங்கிய முகமும்
கை வைத்த பனியனும்
மடித்துகட்டிய லுங்கியென
அரைதூக்க கலக்கத்தில்
நேற்றுவரை கொஞ்சிப் பேசிய
பக்கத்து வீட்டு பாலு மாமா
அப்பாவிடம் பேச உள் நுழைந்ததும்
இதுவே அதுவென ஓவென்ற அழுகை
வளர்ந்து விவரமடைந்து
இவரல்ல பூச்சாண்டி
என்று தெரிந்த பின்
இன்றெல்லாம் என்றாவது
வாய்கொடுத்து மாட்டயில்
ஏல என்கிட்டயே பூச்சாண்டியா
என்று நக்கலடிப்பார்.
இதில் என்ன ஒரு
விசயம் என்றால்
என் பிள்ளைக்கும்
அவரே பூச்சாண்டியானார்
நேற்று மதியம்.
--கனா காண்பவன்

