மழையெனப்படுவது யாதென ~ஆதர்ஷ்ஜி
மழையெனப்படுவது யாதென ~ஆதர்ஷ்ஜி
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சாயங்கால வேளையில்
சடசடத்து வருகிறது மழை
பெருமூச்சுகள் நிறைந்த பெருநகர் ஒன்றில் !
மழையென்ன
திடீரென விட்டுச் சென்ற காதலா
திரும்பி வரும் போது யோசித்து வரவேற்க ?
மழை என்றென்றும் மனதின் மகிழ்வூற்றுதான் ...
ரசித்துப் பார்த்தால் பசிப்பதேயில்லைதான் ... மழை தரும் அழகு !
வாகனத்திலிருந்து கசிந்த எண்ணெய்த் துளிகள் வரைந்த
வானவில்கள் சாலைகளில் ஆங்காங்கே !
ஒதுங்கிய பசுவொன்றின் வயிற்றையே மண்டபமாக்கி
பதுங்கிய நாய் ஒன்று பத்திரமாய் நனையாமல் !
குடையையே கோவர்த்தனகிரியாக்கி, தெரியாத பள்ளிக்
குழந்தைகளையும் கூடவே கூட்டிச்செல்லும் அழகான யுவதி !
கிறக்கம் அடைந்து கேட்பாரின்றிக் கிடக்கும் வயோதிகனுக்கு
இரக்கம் காட்டி தேநீர் வாங்கிக் கொடுக்கும் நடைபாதை வியாபாரி !
அகமகிழ்வோடு போகும் வழியில் விட
சக மனிதனை தன் வாகனத்தில் அழைத்துச் செல்லும் யாரோ ஒருவர் !
நின்று கொண்டிருப்பவரை மிரள வைக்காமல்
நீரை வாரியடிக்காமல் நிதானமாய்ச் சென்ற மகிழ்வுந்து !
ஒதுங்கி நிற்பதை விட்டு இறங்கி நடந்தேன் நனைந்துகொண்டே ...
வழியில் இன்னும் கிடைக்கலாம் கவிதைகள்
வார்த்தைகளாக அல்ல காட்சிகளாக ...!
மழையெனப்படுவது யாதெனக் கேட்பின்
ருசிக்க மறந்து புசிக்கும்
நேசிக்க மறந்து வசிக்கும்
தூசி படிந்த மனித எந்திரங்களை
துலக்கிச் சுத்தமாக்கிச் செல்லுமொரு
திவலைத் துளிகளாய் வரும் பேராறு என்பேன்
பெருநகரத் தெருக்களில்
பெய்யெனப் பெய்திடும் மழை !
~ஆதர்ஷ்ஜி

