செம்மொழி பேசு.
தன் வயதை
தான் அறியாத
தமிழ் மொழிக்குத் தலை வணக்கம்.
மனிதன் ஆராய்ந்து
மனிதன் அறிந்து
மனிதன் கண்டான் தமிழை
என்ற கருத்தை
ஏற்றிடேன் யான்.
பசுவும் - எருமையும் - ஆடும்
பகருகின்ற
அம்மா என்ற வார்த்தையை
அறிவித்தது யார்.
அதன்
அகரம் தானே
எழுத்துக்களைத் தொடங்கி வைக்கிறதென்று
எழுத்து வேந்தன்
எங்கள் வள்ளுவன் உரைத்தான்.
ஆம்
மனிதர்களுக்கு முனனால்
விலங்குகளும் பேசிக்கொண்டிருந்தது
எங்கள்
செம்மொழிச் செந்தமிழை.
நெருப்பிலே குளித்தும்
நீரிலே நடந்தும்
சுந்தரம் குன்றாத
சந்தனத் தமிழுக்கு
செம்மொழித் தகுதி.
காலங்களைக் கடந்து
நூற்றண்டுகளைத் தாண்டி
மனிதர்களின்
பேச்சு வழக்கோடு ஒன்றி
தேவையான அளவிற்க்கு
அதிகமாகவே
இலக்கண இலக்கிய வளங்களோடு
வேற்று மொழியின் துணையின்றி
தன் சுய பலத்தால் வளத்தால்
வெற்றி நடை போடும்
"தனித்தன்மை".
ஆயிரம்
பல்லாயிரம் வருடங்களாய்
காப்பியங்களாலும் , புராணங்களாலும்
மனித நாகரீகத்தை
வளர்த்து வரும்
"தொன்மை".
கலப்படமில்லாத
தாய்ப்பாலைப் போல
பிற மொழிச் சொல் கலவாத - எம்
தமிழ்ப்பாலின்
"பிறமொழிக் கலப்பின்மை".
எழுத்து, அசை, சீர், தளை
என வரையறுக்கும்
யாப்பருங்கலக் காரிகை
உலகம் போற்றும் திருக்குறள். பிற
மொழிகள் வியக்கும் தொல்க்காப்பியம்
தேனூட்டும் காப்பியங்கள்
களிப்பூட்டாத கதைகள்
என "இலக்கிய வளம்".
நன்னெறி சொல்லும்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
என்ற
"உயர்ந்த பண்பு நலன்".
நாரிடம் சேர்ந்திருக்கும் முல்லை
திராவிடம் சேர்ந்திருக்கும் தமிழை
சந்தம் தமிழுக்குச் சொந்தம் - அந்த
சிந்துவும் தமிழுக்குச் சொந்தம்.
என
இரண்டு நாகரீகங்களை வளர்த்த
"பண்பாடு நாகரீகம்".
மொழிபெயர்க்கும் எளிமையும் - பிற
மொழி வியக்கும் வளமையும் பெற்று
சங்கங்கள் வளர்த்த
கன்னித் தமிழ்
காலத்திற்கேற்ப செழுமை பெற்று
கணிணிக்குள்ளும் புகுந்து பாரெங்கும்
கவிச்சுவை குன்றாமல்
காவியம் சொல்லும்
"பொதுமைப் பண்பு".
நன்னெறி , உலக நீதி போன்ற
நீதி நூல்கள் சொன்ன
"நடுவு நிலைமை".
யாதும் ஊரே யாவருங் கேளிர்
எனற புறநானூற்றின்
"உயர்ந்த சிந்தனை".
மாசற்ற ஊற்றுநீர் மலையாளம்
தெவிட்டாத தேன்சுவைத் தெலுங்கு
கள்ளின் சுவைக் கன்னடம்
இப்படிப் பட்ட
குழந்தைகளை பெற்றெடுத்த
"தாய்மைப் பண்பு".
புணர்ச்சி - உணர்ச்சி
தொகை - வகை என
பொன்னி நதியின் கரை போல
கன்னித் தமிழின் "மொழிக் கோட்பாடு".
உலகம் கேட்ட தகுதிகள்
இவைதானே.
நான் இன்னும் சொல்லுவேன்
இன்னும்
எம் தமிழ் மொழி
ஆயிரம் பதினாயிரம்
ஆண்டுகள் கடந்து
காலக் குதிரையின் மேல் ஏறி
காலன் எவரையும் வென்று
வாகை சூடும் வல்லமை பெற்றது.
பல மொழி கற்றவர் அறிவார்
எம் செந்தமிழின் சிறப்பை.
தமிழா
என்றும் தமிழினம் வாழ வேண்டுமாயின்
தமிழை போற்றி வாழ். தமிழில்
உரை ஆற்றி வாழ்.
உலகத்தீரே!
பறந்தெங்கும் செல்ல வேண்டாம் மோச்சத்திற்க்கு
பழகுங்கள் இன்றே கொங்குத் தமிழ்ப் பேச்சிற்கு.