வேண்டு மே தினம்
உங்களுக்கும் உண்டொருநாள்
உழைப்பாளித் தோழர்களே
உலகத்தை உருவமைக்கும்
உயர்ந்தபணி செய்வோரே
உடல்களைப்பு ஒதுக்கிவைத்து
உளத்தினிலே உறுதிவைத்து
உதவுகிறீர் எந்நாளும்
உத்தமர்கள் நீங்கள்தான்
ஊதியமும் பொருந்தாமல்
ஊழலார் திருந்தாமல்
ஊக்கம் கொன்றுவிடும்
ஊர்நிலையே இருந்தாலும்
உருகியே நீங்கள்செயும்
உண்மைத் தொண்டின்முன்
உயிருருகி நிற்கின்றேன்
உறுத்தும் மனத்துடன்நான் !!
உணவிற்காய் உடைக்காய்
உழைக்கின்ற உம்பெருமை
ஊதாரி மனிதர்களின்
உள்ளம் உணர்ந்திடுமா ?
உத்தர வாதமின்றி
உயிரைப் பணயம்வைத்தே
உத்திகளைக் கையாளும்
உன்னதத்தைப் பாடிடவே
உற்சாகத் தொடேழுந்தேன்
உதவிக்குத் தமிழ்த்தாயை
உரக்க அழைத்திட்டேன்
உறங்குகநீ என்றிட்டாள்
உரியதொரு காரணத்தை
உரைத்திடுக என்றேன்நான்
உழைப்போர் தம்நிலையும்
உந்தாயாம் என்னிலையும்
உயராமல் இருக்கும்வரை
உங்கவியால் பயனென்ன ?
உற்றுதான் சிந்தித்தேன்
உறைத்திடுதே இவ்வுண்மை
உளரும் கவிதையில்
உறுபயன் ஒன்றில்லை
உதாசீனப் பட்டு
உழைத்தோர் வடித்து
உலரும் வியர்வையில் ,
உகுக்கும் கண்ணீரில்
உற்பத்தி யாவதே
உயர்கவிதை என்றுணர்ந்து
உடைத்தேன் என்பேனா !
உள்ளுக்குள் நானும்தான் !!