மே 1 சிறப்புக்கவிதை- கவிஞர் முஹம்மத் ஸர்பான்

சாக்கடை நாற்றத்தை
அள்ளும் இரு கைகள்
பூக்கடையில் பாதம் வைத்தால்
காகிதப்பூக்களும் தலைகுனியும்.

டீக்கடையில் எண்ணெய்
படிந்த பழைய வாரமஞ்சரி
காக்கை கொத்தி
ஓவியன் விரல்பட்டால் மோனாலிசா.

கல்லுடைக்கும் ரேகை பளுத்தப்பட்ட
உள்ளங்கையின் காயம்
அல்லின் போது கண்கள்
தூவும் கண்ணீரில் ஆறும்.

ஊசியோடு நூல் கோர்த்து
புழுதி படிந்த பாதணியை
பசித்திருந்து திருத்தும் உழைப்பாளிக்கு
சமுதாயத்தில் சூத்திரன் பட்டம்.

நெல்மணிகள் அறுத்து
அரிசியாக்கும் உழவன் இல்லத்தில்
பண்டிகை நாட்களிலும் கூட
கல்லில்லாத புளுங்கலில்லை.

நீரினிலே குடிகாரன் போல் தள்ளாடும்
ஓடத்தில் தூண்டிலிட்டு பாசியோடு
மீனை அள்ளும் நீருழவனுக்கு பாரினிலே
ஓட்டையில்லாத மேல் சட்டையில்லை.

சுரங்கத்தில் பொன் அள்ளும்
ஏழையின் தேகம் செந்நிறத்தால்
ஜொலிக்காமல் காய்ந்து
கருவாடாய் பசியோடு துடிக்கிறது

வேலை செய்யத்தெரிந்த புத்திசாலி
உடல் வருத்தி உழைக்கிறான். பணம்
கொடுத்து பெயருக்கு பின்னால் இரண்டெழுத்து
பட்டம் பெற்றவன் பாமரனை அடிமையாக்குகிறான்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (1-May-15, 12:25 am)
பார்வை : 203

மேலே