பாவேந்தர் பாரதிதாசனார் இல்லத்தில் சில மணித்துளிகள்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த தினத்தன்று புதுச் சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு செல்வதற்காக அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து அழைப்பு விடுத்த போது மகிழ்ச்சியாக இருந்தது. உடல் நலம் சற்று நலிவுற்றிருந்த போதிலும் செல்ல வேண்டும் என்கிற உந்துதலில் நேற்று விடியற்காலை 5.30 மணி அளவில் இல்லத்திலிருந்து என் கணவரோடு கிளம்பிவிட்டேன்.

தாம்பரத்தில் எனது கவித் தோழிகள் காத்திருக்க அங்கு வந்த அந்த வெண்மைநிற பேருந்து எங்களை சுமந்து கொண்டு புதுவையை நோக்கி பிரயாணித்தது. அந்த பேருந்தில் மொத்தம் 40 எழுத்தாள பெருமக்கள். பேருந்து மேல்மருவத்தூரை கடந்து கொண்டிருந்தபோது, சங்கத்தின் செயலாளர் அவர்கள், பாவலரைப் பற்றி கவிதை கொண்டு வந்தவர்கள் இங்கேயே வாசித்து விடுங்கள். மேடையில் வாசிக்க நேரம் இருக்கிறதோ இல்லையோ?? அவ்வளவு நிகழ்ச்சிகள் இருக்கிறது என்று நிகழ்ச்சிகளை வரிசைக் கிரமப் படுத்தினார். முதலில் கவிதை வாசிக்க என் பெயர்தான் அழைக்கப் பட்டது. நல்ல வேலையாக, அவசர அவசரமாக முந்தைய நாள் நள்ளிரவு 12.30 மணி வரை நான் தூங்கிக் கொண்டே எழுதி முடித்த கவிதை இதுதான்.


பாவேந்தர் பாரதி தாசன்.....

பைந்தமிழின் நரம்பினிலே வீணை மீட்டி
பாவினிலே வீரம் சொன்ன பாவலர் வாழி
கோழையென நாட்டினிலே திரிந்தவர் கண்டு - தமிழ்
சாட்டையிலே எழச் செய்த பாவலர் வாழி

தேனூறும் பலாச் சுளையும் கசந்தே போகும்
கற்கண்டும் பாவலர்பா கண்டே நாணும்
கரும்புசுவை கணிசுவைஎன யாவும் தோற்கும்
இவர்கவி மிகுசுவைஎனவே எறும்பும் மொய்க்கும்...

தொழிலோடு பல கலைகள் யாவும் வளர்க்க
முனைப்போடு செயல்படவே அவர் பாவும் முழங்க
இதன் பலனாய் விளைந்த பலன் எண்ணிலடங்கா - அவர்
சொன்னதின்று பலித்த தெல்லாம் சொல்லிலடங்கா

ஆடு மாடு ஈனுதல்போல் அடுக்கடுக்காய் பிள்ளை
அடுக்காது அதுகொடுக்கும் வாழ்வினில் தொல்லை என்றே
கருவாசல் மூட சொன்ன சிந்தனைவாதி - பாவலர்
சொன்னதெல்லாம் நாடின்று கண்டு நலம்பெரிதாகி.....

பால்யவி வாகமெல்லாம் கண்டே கொதித்தார்
கைம் பெண்ணின் மறுமணத்தின் மேன்மை பகன்றார்
கண்டதெல்லாம் பாவெழுதும் கவிஞர்முன்னே - பிறர்
துயரெல்லாம் கண்டெழுதிகண் டெழுதுவோன் ஆனார்.

சீரும்புயல் போலிருக்கும் பாவலர் தமிழும்
தீக்கங்கு போல் வார்த்தை பாவினில் எரியும்
உமிழ் நீரில் என்றென்றும் தமிழே சுரக்கும் - இவர்
பாடல் நாம் பாட நம் நாவே இனிக்கும்....

பெண்கல்வி மகத்துவத்தை அன்றே சொன்னார்
அவர்கனவு இன்றேதான் பலித்திடக் கண்டோம்
பாவேந்தன் மீண்டும்தான் பிறந்தெழ வேண்டும்
நலிந்திருக்கும் நாடும்தான் நலமுற வேண்டும்.... 

ஓடும் மேடையில் cordless ஒலிபெருக்கியை பிடித்துக் கொண்டு விழாமல் இந்த கவிதையை வாசித்து முடித்தேன். இதன் பின்பு பத்து கவிஞர்கள் தங்களது கவிதையை வாசித்தார்கள்.

10.00 மணி அளவில் ஒரு சிறு சிற்றுண்டி கடையில் அனைவரும் காலை உணவினை உண்டோம். பின்பு நேரே புதுவைதான். அங்கே ஒரு பூங்காவை ஒட்டி அமைந்துள்ள பாவேந்தர் பாரதி தாசன் அவர்களின் சிலைக்கு முனைவர் நடராஜன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு பாவேந்தர் அவர்களின் இல்லம் சென்றோம். வீட்டினுள் வடிவமைக்கப்பட்ட பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

இதன் பிற்பாடு lawspet என்கிற இடத்தில் அமைந்துள்ள விவேகானந்தா பள்ளியில் ஒரு புத்தக வெளியீடு. இந்த பள்ளியின் வாசலில் நுழைகையில் எனக்கு 2013 ஆம் ஆண்டு தமிழன்பன் அய்யா அவர்களின் 80 வது பிறந்த நாள் நிகழ்வும், அகன் சார் அவர்கள் தளத்தில் உள்ள படைப்பாளிகளின் கவிதைகளை தொகுத்து வழங்கிய நிகழ்வும் என் நினைவிற்கு வந்தது. மிகவும் பசுமையான நினைவுகள். . இன்றும் மறக்க இயலவில்லை. அகன் சார் அவர்களின் ஊர் புதுவை என்பதால் அவர் அன்றைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று நினைத்திருந்தேன். ஏனோ எந்த நிகழ்ச்சியிலும் அவரைக் காணவில்லை.

புத்தக வெளியீடு முடிந்து அங்குள்ள "ஜெயராம்" என்கிற பெரிய ஹோட்டலில் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே மதிய உணவினை முடித்துக் கொண்டு "நல்லம்" என்கிற மருத்துவ மனையில் அமைந்துள்ள ஒரு மீட்டிங் ஹாலில் "பாவேந்தர் பாரதிதாசன்" விருது சுமார் 40 பேர்களுக்கு திரு மன்னர் மன்னன் ஐயா (பாவேந்தர் பாரதி தாசன் அவர்களின் புதல்வர்) அவர்களின் கரத்தினால் வழங்கப்பட்டது. என் பெயர் அறிவிக்கப்படும் வரை எனக்கும் அங்கு விருது கிடைக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. எனது பெயரை அறிவித்தபோது அளவிலா ஆனந்தம் அடைந்தேன். விருது வழங்கப் பட்டபின்பு திரு பாரதி அவர்கள் (பாவேந்தர் அவர்களின் பெயரர்) நெடுஞ் சொற்பொழிவாற்றினார்.

விழா முடிந்து "திருவக்கரை வக்கிர காளியம்மன்" கோவிலுக்கு செல்வதாக இருந்தது. நேரம் இல்லாத காரணத்தினால் செல்ல இயலாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தமே. சென்னை திரும்ப இரவு 10.00 மணி ஆகிவிட்டது. மிகவும் மகிழ்ச்சியான பயணம். இந்த ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்த அனைத்திந்திய எழுத்தாள சங்க பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை உங்களிடத்தில் பகிர்வதிலும் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறேன்.

எழுதியவர் : சொ.சாந்தி (30-Apr-15, 10:21 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 228

மேலே