உழைப்பால் உலகை வெல்வோம்
உழைப்பால் உலகை வெல்வோம்..!!
இருபது ஆண்டுகளுக்கு முன்பு
அப்பா பெற்ற கடனுக்கு
கொத்தடிமைகளாக...
இன்றும் விடுதலை கிடைக்காமல்
மலை பிரதேசத்தில்
இராப் பகலாக கல்லுடைத்தும்
கடன் தீரவில்லையாம்...!!
நூறு ரூபாய்க்கு கையொப்பமிட்டும்
ஐம்பது ரூபாய் மட்டுமே கூலியாய்..
ஒரு வேளை பசியையே வெல்லாது
இந்த கொத்தடிமை உழைப்பாளி
என்று உலகை வெல்வது..??
தொழில் நுட்பத் துறையில் பணி
உறக்கமும் ஓய்வும் புறக்கணிப்புகள்
ஆண்களும் பெண்களும் அயராத உழைப்பு
கை நிறைய சம்பளம்...
நவீன பொருட்கள் அத்தனையும்
இல்லத்தில் வாங்கி குவிப்பு...
ஆனாலும்
கணவனும் மனைவியும்
நீ பெரிதா??? நான் பெரிதா??
என்கிற நீயா நானா போட்டிகளில்
நீதி மன்றம் அல்லவோ அவர்களுக்கு
விவாகரத்து பரிசளிக்கிறது...
என்னதான் உழைத்தாலும்
வாழ்க்கையை வெல்ல முடியாதவர்கள்
உலகை எங்கே வெல்லப் போகிறார்கள்..???
ஊரையே விலைக்கு வாங்குகிறான்
சுவிஸ் வங்கியில் கணக்கில்லாமல் பணம்
ஊருக்கு ஒரு பெண்டாட்டி
அல்லது வைப்பாட்டி
உலகெங்கும் உல்லாச பயணம்
போடும் கையொப்பதிற்கெல்லாம்
பணம்... பணம்...
என்ன உழைப்பு... என்ன உழைப்பு
ஊரைக் கொள்ளையடிக்கும் உழைப்பினில்
கேடுகெட்ட அரசியல்வாதி
உலகையே வெல்ல முடிகிறதாம்
வியர்வை சிந்தாமல் இவர்களுக்கு மட்டும்...!!
நாள் முழுதும் வியர்வை வெள்ளத்தில்
இருந்தும் உழைப்பாளி வர்க்கம்
இன்னமும் வறுமை கோட்டிற்கு கீழேதான்...
உண்மையும், நேர்மையும், உழைப்பும்
என்றுதான் உலகை வெல்லப் போகிறது...??
[குறிப்பு: "கவி ஓவியா" மாத இதழ் நடத்த இருக்கும் இன்றைய கவி அரங்கில் வாசிக்க உள்ள கவிதை]
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்...
நட்புடன்...
-சொ.சாந்தி-