உழைக்கும் வர்க்கங்கள் -ரகு
அன்னாடங் காச்சியாகி
-------அல்லலுற
சென்றனரேக் கூலியாகித்
-------தெலுங்குதேசம்
இன்னார்தான் இன்னவேலை
-------யறியாது
அந்நாளில் புறப்பட்டுப்
-------போயினரே!
பாழ்பட்ட வறுமையினால்
-------பரிதவிக்க
வாழ்நாளை முடிக்குமந்த
-------வேலைக்குக்
கூழ்குடித்தக் கையோடுக்
-------கிளம்பியோர்கள்
சூழ்ச்சிக்குள் சிக்குண்டு
-------மாண்டனரே!
உயிர்போன உடல்வந்து
-------சேருகையில்
மயிர்பிடித் திழுக்கும் வலி
-------மார்போடு
வயிர்நிறைந் தொருநாளுங்
-------க(உ)ண்டதில்லை
வயிருப்பிக் கிடந்திருக்க
-------வாய்த்தனரே!
மேதின வாழ்த்தெவருங்
-------கூறாதீர்
மேதினியிற் உழைக்கும்
-------வர்க்கங்கள்
பீதியோ டுழைத்திருக்கக்
-------கூடுமின்றும்
ஆதலினால் அறிவிப்பு
-------என்னவெனில்
உழைப்பாளர் தினமொன்று
-------எதற்கிங்கு
உழைப்பாளர் வாழ்வினிக்க
-------வேண்டுமெனில்
உழைப்போர் தம் கல்விக்கு
-------வித்திடுங்கள்
உழைப்போரும் மனிதரிதை
-------உணர்ந்திடுங்கள்!