அவனாகவும் இருக்கலாம் -ரகு
எரிகிற சிதைகளில்
எப்போதும் மீந்துவிடுகிறது
சில ஆசைகளும் பல கனவுகளும்
தணல்களில் நீர்க்குமிழ்களாய்
அவைகள் மிதப்பது
மனிதம் வாசிக்கும் எவர்க்கும்
புலப்பட்டுவிடும் எளிதாக
சில மரக்கட்டைகள்
சில மனக்கட்டைகள்
எவ்வாறு அழித்துவிடக் கூடும்
அச்சிதையின்
விருப்பு வெறுப்புகளை
ஓருருவாய்
உலவி வந்தவன் இதோ
காற்றில் கலந்து
எங்கும் நீக்கமற நிறைகிறான்
மொட்டையடித்த மகனும்
கருப்புக்கு வந்தவர்களும்
கால்கழுவி தலைமுழுகி
கரைத்தாயிற்று வாழ்ந்தவனின்
ஸ்பரிசத்தை
மரணித்துப் போனவன்
மனிதன் என அறிவாய்ந்ததில்
மீண்டும் சிதைக்குத் திரும்புவதே
ஆத்மார்த்தம்
உணர்வற்ற எழும்புகளின்
உள்ளறைந்து விழும் அடிகள்
வாழ்நாளை வதைத்திருக்கலாம்
நற்செயலிநிமித்தம்
குணங்களெனும் கணக்கீடுகளை
விஞ்சிடாது சிதறியிருந்தன
கனன்ற நெருப்பிடை எழும்புகள்
நாளைக்குச் செத்துப்போகும்
கிழவி ஒருத்தி மட்டும்
"செத்தவன் இனிதான் வாழுவான்" என்றாள்
கும்மிருட்டில் தடி ஊன்றிக்கொண்டு
இரவின் நிறங்கிழியா
நடுநிசி அமானுஷ்யத்தில்
நரபலி குலைத்தது சூறைக்காற்று
பரவும் பரபரப்பு செவிச்செய்தி
''அவனாகவும் இருக்கலாம்''