மறு பக்கம் ஒரு பக்க சிறுகதை

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மெதுவாக நடந்து வீட்டைக் கண்டு பிடித்த பாலமுருகன் காலிங்பெல்லை அமுக்கினார். உள்ளிருந்து வந்த மானசா அவரை அடையாளம் கண்டு கொண்டாள். முகத்தில் ஏகப்பட்ட குழப்பம் இருந்தாலும் “வாங்க அங்கிள்” என்று வரவேற்றாள்.

வந்திருப்பவர் களைத்திருந்ததை கவனித்து, “இருங்க அங்கிள்! காபி எடுத்துட்டு வரேன் ” என்று சொல்லி விட்டுச் சென்றாள் மானசா. வீட்டு முன்னறையில் மானசாவின் மாமனார் நீலகண்டனின் படம் மாலை போட்டு மாட்டியிருந்தது. பாலமுருகனின் நினைவுகள் பின்னுக்குத் தாவின.

இந்த பாலமுருகனும் மானசாவின் மாமனார் நீலகண்டனும் புகல் முதியோர் இல்லத்தில் ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள்.

பாலமுருகனுக்கு ஒரு மகன்; ஒரு மகள். பிள்ளைகள் கடல் தாண்டி வாழ்க்கை அமைத்துக் கொண்டார்கள். மண்ணைப் பிரிய மனசில்லாத காரணத்தால் பாலமுருகன் மனைவி போன பிறகு அந்த இல்லத்துக்கு வந்து விட்டார். மற்றபடி பிள்ளைகள் பிரியமாகத்தான் இருக்கிறார்கள். இப்போதும் கனடா வரச் சொல்லி மகனும் மருமகளும் கெஞ்சத்தான் செய்கிறார்கள். மாப்பிள்ளை லண்டன் வரச் சொல்கிறார். குறையில்லாத வாழ்க்கை...

நீலகண்டன் மகன் முத்துக்குமார் உள்ளூரில் வசிப்பவன். திருமணமான மறு மாதமே அப்பாவைக் கொண்டு வந்து இல்லத்தில் விட்டு விட்டான். பையனும் மருமகளும் துரத்தி விட்டுட்டாங்க என்று நீலகண்டன் பாலமுருகனிடம் புலம்பினார்.

முத்துக்குமார் தன் மனைவி மானசாவோடு அடிக்கடி இல்லத்துக்கு வருவான். மானசா சில சமயம் ஆபிசிலேயே உட்கார்ந்திருப்பாள். முத்துக்குமார் மட்டும் அப்பாவைப் போய் பார்த்து விட்டு வருவான்.

விடுதிக் காப்பாளரைப் பார்க்க சில சமயம் பாலமுருகன் வரும்போது மானசா அங்கிருந்தால் பாலமுருகனுக்கு ஆத்திரம் தாங்காது. மகாராணிக்கு மாமனாரைப் பார்த்துக்க முடியாதோ என்று ஜாடைமாடையாக கரித்துக் கொட்டுவார். அழகிருந்து என்ன பயன்? குணம் வேண்டுமே? இவளுக்குத்தான் புத்தி இல்லை; இந்தப் பையனுக்கு வேண்டாமோ என்று முத்துக்குமாருக்கும் திட்டு கிடைக்கும். முத்துக்குமாரோ மானசாவோ மறு வார்த்தை பேசியதில்லை- தலை குனிந்து போய் விடுவார்கள்.

நீலகண்டனுக்கு தள்ளாமை அதிகரித்து பார்வை மங்கியது. மகனும் மருமகளும் அவரை வீட்டுக்கே அழைத்து வந்து விட்டனர். அப்போதுதான் பாலமுருகன் விடுதிக் காப்பாளரை ஆச்சரியத்தோடு கேட்டார், “ என்ன, நீலகண்டனுக்கு ஏதாவது பணம் வரப் போகுதா? பையன் தாங்கறான்? ”

விடுதிக் காப்பாளர் பாலமுருகனை ஏற இறங்கப் பார்த்தார். “ பணமெல்லாம் ஒண்ணும் வரல்ல; கடைசி காலமாச்சேன்னு அழைச்சிட்டுப் போறாங்க. ”

“ அடேங்கப்பா, என்ன அக்கறை! பின் எதுக்கு அவரை முதியோர் இல்லத்துல சேர்த்தாங்களாம்? ”

“ மருமக குளிக்கும் போது எட்டிப் பார்த்தா...,ராத்திரி பெட்ரூமில இருக்குறவங்கள சாவித் துவாரம் வழியாப் பார்த்தா முதியோர் இல்லத்துல சேர்க்காம முதலைப் பண்ணையிலா தள்ளி விட முடியும்? ”

பாலமுருகன் ஸ்தம்பித்துப் போனார்.

“ஒரு பக்கத்தை மட்டும் கவனிச்சுட்டு இப்படித்தான் இருக்கும்னு நாமளா நினைச்சுட்டு கண்டபடி ஏசக்கூடாது. நீங்க அந்தப் புள்ளைய அப்படி கரிச்சுக் கொட்டினீங்களே? அவ வாயைத் திறந்து காரணத்தைச் சொல்லியிருந்தா நீலகண்டனோடு நீங்க இப்படியா பேசிப் பழகி யிருப்பீங்க? அருவருத்து ஒதுக்கி வச்சிருக்க மாட்டீங்க? ”

வக்கிர புத்தி படைத்திருந்தாலும் மாமனாராயிற்றே என்று கவனித்துக் கொண்ட மானசாவிடம் மன்னிப்பு கேட்க இதோ வீடு தேடி வந்திருக்கிறார். ..... !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : அருணை ஜெயசீலி (4-May-15, 2:19 pm)
Tanglish : maru pakkam
பார்வை : 294

மேலே