தண்டச்சோறு

“என்னங்க்ககக” என்று அலறல்க் குரல் கேட்க பெட்ரூமில் மடிக்கணினியில் ஆபிஸ் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் விழுந்து அடித்து ஓடி வந்தார். ஹாலில் சோபாவில் அதிர்ச்சியுடன் விழி பிதுங்க அமர்ந்திருந்த தன் மனைவியிடம் “என்னாச்சு பத்மினி? ஏன் இப்படி இருக்க?” என பதட்டத்துடன் கேட்டவரிடம் கையில் வைத்திருந்த கடிதத்தைக் கொடுத்து “இப்பதான் வந்தது” என்றாள் படபடப்பு குறையாமல்.

அதை வாங்கி படித்த ராகவனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது “இதுக்கா இப்படி கத்தின நான் என்னமோ ஏதோன்ல பயந்துட்டேன் .. எனிவே கன்கிராட்ஸ்“ என்றார்.
அந்த கடிதம் டமால்-டுமீல் சேனலில் இருந்து வந்தது. ஒரு மாததுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு ஒருசிலருக்கே தெரிந்த சேனல். இந்த சேனலின் நிறுவனர் வடக்கில் உள்ள ஒரு பெரும் புள்ளி. சென்னை அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் அனைவரும் வடகத்தியர்தான். அவர்களில் சிலருக்கு தமிழ் தெரியும். அந்த சேனலிருந்து பத்மினிக்கு சமையல் நிகழ்ச்சி நடத்த வந்த ஒப்புதல் கடிதம்தான் அது.

பத்மினி இல்லதரசி கணவர் ராகவன் பேங்கில் உயர் அதிகாரி. அவர்களின் ஒரே மகள் சிந்து வெளிநாட்டில் படிக்கிறாள். பத்மினி சமையல் செய்வதில் கெட்டிக்காரி கொஞ்சம் ஜம்பம் அதிகம் ஆனால் பதம் பக்குவம் பார்த்து சமைப்பதில் அவளை மிஞ்ச ஆளே இல்லை எனலாம். எந்த ஒரு உணவு பொருளையும் வீணாக்கமாட்டாள். புதிது புதிதாக உணவு பதார்த்தங்களை செய்து பார்ப்பாள். பாவம் ராகவன்தான் அதற்கு முதல் ப(எ)லி.

பத்மினிக்கு தான் சமையல் கலையில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற தனியாத ஆசை எப்பொழுதும் உண்டு. அதனால் அவள் நிறைய தமிழ் வார மற்றும் மாத பத்திரிக்கைகளுக்கு தன் சமையல் குறிப்புகளை எழுதிப் போடுவாள். ஆனால் பதில் வந்த பாடில்லை. தன் சமையல் குறிப்பு பத்திரிக்கையில் வெளிவர வேண்டும், அதை தன் சொந்த பந்தம் (குறிப்பாக மாமியார் வீட்டில்) மற்றும் நண்பர்களிடம் காட்டி பீற்றீக் கொள்ள வேண்டும் என்று அவளும் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள். சமையல் நிபுணத்துவம் 90 சதவீதம் அலட்டல் 10 சதவீதம் இந்த கலவைதான் பத்மினி.

திடீரென்று ஒரு நாள் அந்த புதிய டமால்-டுமீல் சேனல் கண்ணில்ப்பட்டது. அதில், ஒரு படத்தில் இரண்டு வரி மட்டுமே பேசிய நடிகர் ஒருவர் தன் வாழ்க்கை சாதனையைப் பற்றி அலவளாவிக் கொண்டிருந்தார். கீழே ஒரு சின்ன குறிப்பு ஓடிக் கொண்டிருந்தது. டமால்-டுமீல் சேனலின் புதிய சமையல் நிகழச்சி “ருசிச்சு சாப்பிடு” ஆரம்பம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்கு பெற்று உங்கள் சமையல் திறமை பளிச்சிட ஓர் அரிய வாய்ப்பு. தங்களின் ருசியான உணவு வகைகளுடன் உங்கள் புகைப்படம் மற்றும் முழு முகவரியை டமால்-டுமீல் சேனல் தபால் பெட்டி எண் 420 என்ற முகவரிக்கு அனுப்பவும் என்று இருந்தது. இதை பார்த்தவடன் பத்மினிக்கு ரெக்கைக கட்டி பறப்பது போல் ஒரு சந்தோஷம். உடனே தன் மூளையை கசக்கி ஒரு புதிய பதார்த்தத்தை தயார் செய்தாள் அதற்கு எப்பொழுதும் போல ராகவனும் பலி.

தன் புதிய கண்டுப்பிடிப்பை டமால்-டுமீல் சேனலுக்கு உடனே அனுப்பி வைத்தாள். அந்த சேனலுக்கு வந்தது பத்மினியின் சமையல் குறிப்பு மட்டுமே, உணவு வகையும் வித்தியாசமாக இருந்தது ஆதலால் பத்மினி போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள். அவளுக்கு அனுப்பபட்ட ஒப்புதல் கடிதத்தை பார்த்துதான் இன்ப அதிர்ச்சியில் கணவனை அழைத்தாள்.

“பத்மினி நாளைக்கு காலையில பத்து மணிக்கு இவங்க கொடுத்த முகவரிக்கு போகணும்” என்றார் ராகவன்
“நீங்களும் என்கூட வாங்க .. எனக்கு டென்ஷனா இருக்கு”
“நீதான கஜினி முகமது மாதிரி முயற்சி செஞ்சிக்கிட்டே இருந்த .. அதுக்கு நல்ல பலன் கடைச்சிருக்கு ... நானும் வரேன் டென்ஷன் ஆகாத” என்றார் ராகவன்

மறுநாள் காலை டமால்-டுமீல் சேனல் அலுவலகத்திற்கு சென்றனர் இருவரும். சேனல் அலுவலகம் மார்பிள் டைல்சாலும், விலை உயர்ந்த கலைப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. வரவேற்ப்பு அறையில் சேனல் நிறுவனரான பஞ்சாபிகாரன் தன் மனைவியுடன் “ஈஈஈ”யென இளித்துக் கொண்டிருந்தான் பெரிய தங்க பிரேம் போட்ட புகைப்படத்தில்.


வரவேற்ப்பு அறையில் பெரிய டேபிள் நாற்காலியில் நடுநாயகமாக படு பந்தாவாக அமர்ந்திருந்தவரிடம் ராகவன் அவர்களுக்கு வந்த கடிதத்தை காட்டினார். அவரும் பார்த்துவிட்டு பத்மினி ராகவனை அமர சொல்லி அக்கடிதத்துடன் உள்ளே சென்றார். இரொண்டொரு நிமிடத்தில் ஒருவன் இருவருக்கும் குளிர்பானத்தை பவ்யமாக கொடுத்து உபசரித்தான். ஐந்து நிமிடம் கழித்து கடிதத்துடன் சென்றவன் வந்து “அடுத்த சனிக் கிழமை உங்க சமையல் நிகழ்ச்சிய ஷீட் பண்ணப் போறோம் .... ஷீட்டிங்க்கு தேவையான காஸ்டியூம், ஜவெல்ஸ், சமையலுக்கு தேவையான பாத்திரம் மற்றும் சமையல் பொருட்கள நீங்களே கொண்டு வரணும் .... மேக்-அப் மட்டும் இங்க செய்வாங்க.” என இந்திமிழ் (இந்தி + தமிழ்)லில் பேசினான்.
”நிகழ்ச்சி என்னிக்கு டி.வில வரும்” பத்மினி தயங்கியவாறு கேட்டாள்.
“ஷீட் முடிஞ்ச பைவ் டேஸ்ல டெலிகேஸ்ட் ஆகும் இரவு 7:30க்கு”
பிறகு சில சம்பிரதாயமாக பேச்சுகளுக்கு பிறகு அங்கிருந்து கிளம்பினர்.

பத்மினிக்கு உலகமே தன் சமையலறையில் விழுந்ததுப் போல் உணர்ந்தாள். பால்காரன், பேப்பர்காரன், அக்கம பக்கத்து வீடுகள் முதல் தனக்கு தெரிந்த அனைவரிடமும் தான் டி.வியில் வரப்போவதை பீற்றிக் கொண்டாள். முக்கியமாக மாமியார் வீட்டில் அனைவருக்கும் போன் செய்து பேசினாள்
“மொத்தம் பத்தாயிரம் ரெசிபில என்னோடத மட்டும்தான் செலக்ட் பண்ணாங்க ...”
“நீங்கதான் இந்த ஷோவ செய்யணும் ..உங்களோட ரெசிபிதான் பெஸ்ட் சொல்லிட்டா”
“பைவ் ஸ்டார் ஹோட்டலதான் ஷீட்டிங்”
ஒவ்வொருவரிடமும் பொய்யை கணக்கு பார்க்காமல் நெய்யைப் போல அள்ளி வீசினாள். பலருக்கு பொறாமை சிலருக்கு என்ன ரெசிபி செய்துவிட போகிறாள் என்ற ஏளனமும் இருந்தது.

அடுத்த நாள் நிகழ்ச்சிக்கு தேவையானதை வாங்க வேண்டும் என ராகவனையும் இழுத்துக் கொண்டு ஷாப்பிங் கிளம்பினாள். முதலில் நல்லி சில்க்ஸ் “இப்பதானே பொங்கலுக்கு புடவை வாங்கின அதையே கட்டிக்கோயே...“
“நீங்களே சொல்றீங்க அது பொங்கலுக்கு வாங்கினது அப்புறம் அதை எப்படி கட்றது?”
“பொங்கலுக்கு வாங்கினது பொங்கலுக்கு மட்டும்தான் கட்டணும்னு அந்த புடவை சொல்லிச்சா?“ என மனதில் நினைத்தார் ராகவன் கேட்க தைரியமில்லை அதனால் வாய் கப்-சிப்.
“நான் டி.வி ஷோல வரப்போறேன் .. அதனால நல்ல பெரிய ஜரிகை போட்டு பாக்க எடுப்ப இருக்கறமாதிரி புடவை எடுங்க“ என அங்கேயும் விடவில்லை.
கடையையே அலசி பத்தாயிரம் ரூபாய்க்கு அகல ஜரிகை போட்ட பட்டுபுடவை வாங்கினாள்.

அங்கிருந்து ஜி.ஆர்.டி நகைக் கடைக்கு சென்று 3பவுனில் ஒரு தங்கஹாரம் வாங்கினாள். ராகவனுக்கு பக்-பக் என்றது அடுத்து என்னவோ என்று நல்லவேளை நகைக் கடையில் அதோடு முடிந்தது.
அங்கிருந்து பாத்திரக் கடைக்கு படை எடுத்தாள். தனிக் குடுத்தனம் வைக்கும் அளவிற்கு பொருட்களை அள்ளிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். ராகவனும் அவர் பர்சும் மெலிந்து போயினர்.

பிறகு பியூட்டி பார்லருக்கு சென்று என்ன செய்தாள் முகம் அழகாகும் என அவர்கள் சொன்னார்களோ அத்தனையும் செய்துக் கொண்டாள். இத்தனைக்கும் நடுவில் தான் நிகழ்ச்சியில் நடுநடுவே பேச வேண்டியவற்றை தயார் செய்து கண்ணாடி முன்நின்று பேசி பழகினாள். தான் செய்யும் உணவுகனின் நன்மைகள் செய்முறை என பிரித்து அருமையாக தயார் செய்தாள். தினமும் பதார்த்தங்களை செய்தும் பழகினாள்.

சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு டமால்-டுமீல் சேனலுக்கு
இருவரும் சென்றனர். அங்கிருந்தவர்களை அசந்து போகும் அளவு பத்மினி நிகழ்ச்சியை செய்தாள். அவர்கள் பாராட்டையும் பெற்றாள். அவர்கள் கேட்டதற்கு இணங்க உணவு வகைகளின் செய்முறை விளக்கமும் பதார்த்ததின் பெயரையும் எழுதிக் கொடுத்தாள்.

பத்மினிக்கு அடுத்த ஐந்து நாட்கள் ஐந்து யுகங்களாக இருந்தது. எப்பொழுதும் வீட்டில் டமால்-டுமீல் சேனல்தான் “அந்த நாளும் வந்திடாதா”.... “இதுதானா இதுதானா எதிர்பார்த்த நன்னாளும் இதுதானா” என அவள் மனதிற்கு ஏற்ப பாடல்கள் ஒளிபரப்பாயின.

கடைசியாக அந்த பொன்னான நாளும் வந்தது. பத்மினிக்கு ஒரே பரபரப்பு. நிகழ்ச்சி நல்லபடியாக ஒளிபரப்பாக பொருமாளுக்கு ஒண்ணேகால் ரூபாய் உண்டியலில் போட்டாள். இரவு ஏழரை மணிக்கு நிகழ்சசியும் ஒளிபரப்பானது. அரைமணி நேர நிகழ்ச்சி எந்த தடையுமின்றி சென்றது. ஆனால் முடிவில் “தண்டச்சோறு” செய்முறை விளக்கம் அளித்தவர் பத்மினி என திரையில் வந்தது. பத்மினி தண்டுக்கீரை மற்றும் மற்ற கீரை வகைகளின் தண்டுகளை வைத்து புதிய சாதவகை செய்தாள் அதற்கு தண்டுச்சோறு என பெயர் இட்டாள். அந்த வடநாட்டுக்காரன் தண்டுச்சோறை தண்டச்சோறாக்கி விட்டான்.

கோபம் தலைக்கேறியது பத்மினி பத்ரகாளியாய் மாறினாள். உடனே சேனலுக்கு போன் செய்து “என்னய்யா போட்டிருக்கே தண்டுச்சோறுனு போட சொன்னா தண்டச்சோறுனா போடுவ? ” என கோபத்தில் வெடித்தாள்.
“ஸாரி மேடம் .. அவர் வேலைக்கு புதுசு தமிழ் சரியா தெரியாது இது ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்தானே மேடம் .. ” “இதுவா சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் இதோட அர்த்தம் தெரியுமா உனக்கு?”
“ஸாரி மேடம் ..” என கிளிப் பிள்ளையைப் போல மீண்டும் அதையே கூறி போன் லைனை துண்டித்துவிட்டான். இனிமேல் அவனிடம் பேசிப் பயனில்லை.


பத்மினிக்கு தலையில் இடி விழுந்ததுப்போல் ஆனது. இத்தனை கஷ்டப்பட்டும் எல்லாம் வீணாகிவிட்டதே என்று கோபம் ஆத்திரம் எல்லாம் சேர்ந்து அவளை ஆட்டிப் படைத்தது. அனைவர்முன்னும் தலைகுனிவு ஏற்பட்டுவிடும் என்பதுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது. ராகவனுக்கும் சங்கடமாக இருந்தது. அந்த நேரத்தில் அவள் செல் போன் சிணுங்கியது .. பத்மினி யாருக்கும் பதில்கூறும் நிலையில் இல்லாததால் போனை எடுக்கவில்லை. யாருடைய அழைப்பு என ராகவன் போனை எடுத்த பார்த்தவருக்கு அதிர்ச்சி.
“ராட்டஸினு பேர்ல சேவ் பண்ணியிருக்க ... யார் இது?”
“ம்ம்ம் உங்க பாசமலர் ...எல்லாம் உங்க தங்கைதான்” பக்கென்று இருந்தது ராகவனுக்கு கேட்காமலேயே இருந்திருக்கலாமோ என தோன்றியது ... அது சரி அப்ப என் பேரு ... வேண்டாம் தெரியாம இருக்கறதே நல்லது என விட்டுவிட்டார்.

படக்கென்று போனை பிடிங்கினாள் பத்மினி .... போனை உயிர்பித்து..“ஹலோ ராட்....ராகினி எப்படிம்மா இருக்க?“ என தன் உணர்ச்சிகளை அடக்கி பேசினாள். ராகினி தொடுக்க போகும் பாணத்திற்கு எதிர் பாணம் மனதில் தயாரானது.
“அண்ணி நிகழச்சி சூப்பர் .. அதுலயும் உங்களோ பதார்த்தப் பெயர் அதவிட சூப்பர் ...” என ஏளனம் கொடிக்கட்டி பறந்தது அவள் குரலில்.
“டேங்க்யூ .. டேங்க்யூ... டேங்க்யூ இருக்காத பின்ன நான் செலக்ட் பண்ண பேர் ஆச்சே” நக்கலான பதிலடி விழுந்தது.
“என்ன ... இந்த பேரயா நீங்க...”
”ஆமா கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு நான்தான் பெயர் வெச்வேன் .. பேரு இப்படி வித்யாசமா இருந்ததாலதானே இப்ப நீ போன் பண்ணின சொல்லு .. சாதாரணமா இருந்தா நீ பேசுவியா” எனச் சொல்லி சிரித்தாள்.
மறுமுனையில் பதில் வரவில்லை.


பஞ்சாபிக்காரன் செய்த எழுத்துப் பிழை அவள் தலைஎழுத்தையே மாற்றியது. பஞ்சாபிக்காரன் செய்த தவறை பத்மினி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள். அனைவரிடத்திலும் ராகினிக்கு சொன்ன பதிலையே கூறினாள். அதிர்ஷ்டவசமாக அந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தபடியால் இவளுக்கும் நல்ல பெயர்.

மீதமான சாதத்தை வைத்து 101 சுவையான உணவு வகைகளை செய்யும் புத்தகம் வெளியிட்டாள். புத்தகத்தின் பெயர் “தண்டச்சோறு”.

“தண்டச்சோறு” பத்மினி என அவளுக்கு பட்டப்பெயரும் கிடைத்தது. தண்டச்சோறால் பத்மினிக்கும் ... பத்மினியால் தண்டச்சோறுக்கும் பெருமை சேர்ந்தது.

(இந்த கதையில் வரும் சம்பவங்களும் கதபார்த்திரங்களும் கற்பனையே எவரையும் குறிப்பிடுவன அல்ல)

எழுதியவர் : Shreerao (5-May-15, 12:46 pm)
பார்வை : 507

மேலே