திருவலிவலம் பதிகம் 4

முதல் திருமுறையில் 123 வது தலமாக ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருவலிவலம் பதிகத்தில் 4 ஆம் பாடல்.

அனனிகர் சடையழ லவியுற வெனவரு
புனனிகழ் வதுமதி நனைபொறி யரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை:

வலிவலம் உறை இறைவன், அனல் போன்ற சடை அழலை அணைக்க வருவது போன்ற கங்கை திகழ்வதுடன், பிறையையும், பூ மொட்டுப் போன்ற படப்புள்ளிகளை உடைய பாம்பையும் முடிமிசை உடையவன் என்னும் நினைவோடு வரும் மனமுடைய அடியவர் வாழும் சிறப்பினை உடையது வலிவலமாகும் என்கிறார் ஞானசம்பந்தர்.

குறிப்புரை:

முடிமீது மனமுடையவர் வலிவலம் உறை இறைவர் என்கின்றது. அதற்குரிய ஏது கங்கையோ செந்தழல்போன்ற சடையின் தீயை அணைக்க வருவதுபோலப் பெருகிக் கொண்டிருக்கிறது.

அக்கங்கையில் நனைந்த அரவமும் நம்மால் விழுங்கத்தக்க மதி என நினைவொடும் வருகின்றது.

ஆதலால் இவை தருக்கும், பகையும் மாறித் தத்தம் எல்லையில் ஒடுங்க இறைவன் எப்போதும் தலைமேற் சிந்தையராக இருக்கின்றார் என்ற நயந்தோன்றக் கூறியது.

அனல் நிகர் சடை அழல் அவியுற - நெருப்பை ஒத்த சடையின் தீயானது தணிய.

நனை பொறி அரவம் - நனைந்த படப்புள்ளிகளோடு கூடிய பாம்பு.
நனை - கூரிய என்றுமாம்.

குறிப்பு:

திருவலிவலம்:

இறைவர் பெயர் இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்,

இறைவியின் பெயர் வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி,

தல மரம் - புன்னை, தீர்த்தம் - சங்கர தீர்த்தம்.

தல வரலாறு: வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.

சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

சிறப்புகள்: வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.

இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.

தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.

கோவிலுக்குச் செல்லும் வழி:

தமிழ் நாட்டில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம்.

திருவாரூரிலிருந்து 10-கி. மீ. தொலைவிலுள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் வரலாம்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-May-15, 7:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 170

சிறந்த கட்டுரைகள்

மேலே