ஒரு பழைய பாட்டு
ஏகாந்தப் பெருவளிகளில்
நன்னடத்தை விருதுகள்
மனசாட்சியால் கிடைக்கப்பெறாமல்
துண்டாக்கப்பட்ட கணங்களில்
துடித்துக்கொண்டுப் பேச விருப்பமின்றி.
பித்தவெடிப்புகளில்
நுழைந்திட்ட சிறு
மணல்துகள்களாலான
நெருடல்கள் மனமெங்கும்.
கசாப்புக் கடை கத்திப் பார்வைகளால்
பல முறை பலிகொடுக்கப்பட்ட
தருணங்களிலெல்லாம்
நமட்டுச்சிரிப்பு உதிர்க்கும்
என் சீர்வரிசைப் பற்களை
மூடிய உதடு ருசிக்கும் கனவுகளில்
லயிக்கும் கண்களால்
சிறிதும் அச்சமின்றி.
ஏதுமொரு சுவாரஸ்யமற்ற
வசூலித்த இம்சைகளுக்கு பின்
செலுத்தப்படும் அதீத வேகத்தில்
கசியும் ஒரு சிறுபிராய நினைவிலோ
சினிமா நடிகை மாதிரி இருக்க என்று
கன்னம் கிள்ளிய தூரத்து
உறவுக்காரனின் நினைவிலோ
விழிகளில் வடிவது மட்டுமே
ஈரமென உணர்ந்திருக்கும்
உடல்.
--கனா காண்பவன்