என் தங்கத் தம்பி பாப்பா

அம்மாவின் கருவிருந்து
மாதம் பத்து தின்று ஜனித்தேன்
வீட்டிற்குத் தலை மகளாய்....

கலை மகளாய்..
அலை மகளாய்..
மலை மகளாய்..
கொண்டாடினார்கள் ஊரும் உறவும்..!!

தவழ்ந்து, எழுந்து, நடந்து..
அடிஎடுத்து வைத்தேன்
என் பால பள்ளிக்குள்..

படிப்பும் விளையாட்டுமாய்
பஞ்சமில்லா செல்லத்துடன்
கழிந்தன என் பொழுதுகள்..

ஆண்டுகள் இரண்டு ஆனபின்..
அம்மா ஒரு நாள் கேட்டாள்,
"உனக்கு தம்பி பாப்பா வேணுமா
தங்கச்சி பாப்பா வேணுமா..?" என்று

செப்பு சாமான் விளையாட்டை
விட்டுவிட்டு யோசித்தேன் யோசித்தேன்..
இரவு வந்து தூங்கியே விட்டேன்.....

காலையில் எழுந்து
கையில் பால் டம்ளருடன்
அம்மாவிடம் கேட்டேன்...
"தம்பி பாப்பா எப்போ வரும்...?"

அம்மா அவளின் மேடிற்ற வயிற்றைத்
தடவிச் சிரித்தபடி சொன்னாள்
"இன்னும் கொஞ்ச நாள்ல" என்று


நீ அம்மாவின்னுள்ளே தான்
இருக்கிறாய் என்று தெரிந்துகொண்டேன்
அன்றிலிருந்தே நீ ஆகிவிட்டாய்
என் செப்பு வீட்டின் செல்ல பாப்பாவாய்...

பின் ஒரு நாள் என்னை,
பள்ளியிலிருந்து நேரே அழைத்துப் போனார்கள்
மருத்துவமனைக்கு - ஊசியின் பயம்
தொற்றிக்கொண்டது என்னுள்ளே...

சிறிது நேரத்தில்,
அம்மாவின் மடியில் சிகப்பு ரோஜாவாய்
சின்ன சின்ன அங்கம் கொண்டு
சிங்காரமாய் நீ இருந்தாய்....

திகழ்ச்சியில் திக்கு முக்காடி
உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன்
உள்மனதுள் உன்னிடம் பேசியபடி....

ஆண்டுகள் ஓட உன் அகவைகள் கூட..
செப்பு விளையாட்டில் ஆரம்பித்த நாம்
இன்று,
சேர்ந்து ரசிக்கின்றோம் கிரிக்கெட் விளையாட்டை..

எனக்கு தம்பி பாப்பாவாய் பிறந்த நீ,
என் அண்ணணாகவும் நண்பனாகவும்
உருமாறித் தோன்றுகிறாய்
இன்று பல தருணங்களில்...

உன் அத்தானின் கை பிடித்து,
அவர் வீடு புகுந்த பின்னும்..
உன்னுடன் பேசியபடியே இருக்கும்
என் உள் மனது.............
என்றும் நலமுடன் இரு....
என் தங்கத் தம்பி பாப்பா....!!

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (7-May-15, 12:25 pm)
பார்வை : 3151

மேலே