வேண்டாம் இந்த கூட்டுப்புழு
வேண்டாம் இந்த கூட்டுப்புழு
=============================================ருத்ரா
ஓ! காலதேவனே
கால் சட்டை பருவத்திலிருந்தே
திடீரென்று
அந்த குடும்பப் பாறாங்கல் பருவத்துக்கு
தூக்கிச்செல்.
வேண்டாம் இந்த கூட்டுப்புழுப் பருவம்.
சிறகுகள் முளைப்பதற்குள்
வர்ணங்கள் உடம்பெல்லாம்
சூடு வைப்பதற்குள்
மின்னலையும் வானத்தையும்
வதக்கி வதக்கி தின்று
ருசி பார்ப்பதற்குள்
அவள் சிரிப்பு எனும்
ஒரு கீற்று காட்டி
என்னை ரத்தம் கொதிக்கும் கடலில் தள்ளி
அதிலிருந்து நான் கரையேறுவதற்குள்
எங்கு நான் பறப்பது?
வான வில் என்று நான் அண்ணாந்து பார்ப்பதற்குள்
அதிலிருந்து
ஆயிரம் அம்புகள் வந்து
என்னை தைத்து
எனக்கே ஒரு சட்டை மாட்டிவிடும்.
அந்த கந்தல்களின் வழியாக
நான்
என்னத்தைப்பார்த்து ரசிப்பது.
போதும் ...
அதோ கெட்டிமேளம்.
அதோ மாங்கல்யம் தந்து நானே...
என் கூடு தயார் ஆகட்டும்.
என் மின்னல் குஞ்சுகளுக்கு
நான் காட்டுவேன்
அந்த மின்னல் பேராற்றை.!
அப்பொன் குஞ்சுகள்
நாளை இப்படி
செல்களோடு ஊஞ்சல் ஆடட்டும்.
அந்த பொம்மை விளையாட்டில்
நானும் சில பொம்மைகளாய் நின்று
ரசித்துக்கொள்வேன்.
குழல் இனிது யாழ் இனிது
மட்டும் அல்ல
அப்போது அவர்கள்
நாள் இனிது நடை இனிது.
அதுவே எனக்கு கோடி இன்பம்.
============================================