வங்கொடுமை சாக்காட்டில்

வேலும் வீச்சறிவாளுமின்றி
ஒரு போருக்கான ஆயத்தங்களுடனே
புறப்பட வேண்டி இருக்கிறது
தினம் தினம்

ஆனாலும்

வாகன ஓட்டியோ வழிப்போக்கனோ
பாசமாய்ப் பழகும் பக்கத்து வீட்டுக்காரனோ
ஏதோ ஒரு முகத்திலிருந்து
எதிர்பாரா ஒரு தருணத்தில்
எங்கோ எப்போதோ
யாருக்கேனும் நடந்துவிடுகிறது
அந்தக்கொடூரம்

சட்டத்தின் கம்பிகள் பலப்படவேண்டும்

சற்று முன்னர்தான் ஜாமீனில்வந்து
முகம் கழுவிக்கொண்டிருக்கும்
என் தலைவனுக்கு
வளைக்குமளவு அது
பலவீனமாகவே இருக்கவேண்டும்

தங்கைகளின் ஓலங்கள்
எட்டாத தூரத்தில்
தலைவனின் விடுதலைக்காய்
பால்குடமும் ஏந்தியும் காவடியும் தூக்கியும்
பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
எமது சகோதரர்கள்

தனித்துவிடப்பட்ட போராளிகளாய்

வங்கொடுமையென்றும்
காமக்கொடூரனென்றும்
இலக்கியமாய் பெயர் சூட்டி
வாட்ஸப்பிலும் வலைத்தளத்திலும்
வாள்வீசிக் களைத்துவிட்டோம்




ஒழிந்த ஒரு பொழுதில்
ஒன்றாகக் கூடி
மெழுகுவர்த்தி ஏந்திவிடோம்

கவலைகொள் மனித இனமே

ஏந்தும் நெருப்பின் எரிதழல் சீற்றத்தால்
கிளைத்தெழும் பெருந்தீயில்
பூமிப்பந்து ஒருநாள்
சாம்பல் உருண்டையாய்
மாறிவிடக்கூடும்

பின்
சாம்பலில் மீண்டுவர
நீயொன்றும் பீனிக்ஸ் பறவயில்லை

எழுதியவர் : (7-May-15, 11:47 pm)
பார்வை : 1350

மேலே