மாற்றம்- வித்தியாச சிறுகதை

................................................................................................................................................................................................
நகர மத்தியில் அமைந்திருந்த தமது அலுவலக அறையில் அப்போதுதான் நுழைந்தார் பிரபல ஃபேஷன் டிசைனர் கௌரிசங்கர். தேர்ந்தெடுத்து அவர் அணிந்திருந்த ஆடைகள் ரசனையும் கண்ணியமும் கொண்ட ஒரு ஆண் மகனை கண் முன் நிறுத்தின.

அவருக்காக நெடு நேரம் காத்திருந்த ஷீபா எழுந்தாள். மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பரிசு வென்றவள். அவளின் வெற்றிக்கு கௌரிசங்கர் வடிவமைத்துக் கொடுத்த ஆடைகளும் ஒரு காரணம். அன்று மாலை ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு அவரை அழைக்கத்தான் நேரில் வந்திருக்கிறாள்.

“நீங்கள் வடிவமைத்த சேலைகளை கல்லூரிப் பெண்களும் அணிகிறார்கள்...” இமைகளைப் படபடத்து ஆச்சரியத்தோடு சொன்னாள் ஷீபா. கௌரிசங்கர் புன்னகைத்தார்.

அவர் வடிவமைத்த சேலைகள் பலவிதம். முன்னும் பின்னும் சுருக்கத்துடன் காணப்படும் சேலை, உள்பாவாடை அணியத் தேவையில்லாத சேலை, கால்கள் இயங்க முழு சுதந்திரம் அளிக்கும், தொடைகளைத் தாண்டி சரேலென்று இறங்கும் மடிப்புகளுடன் நடனப்பாணி சேலை, கை இயக்கத்தை முழுமைப்படுத்த ஸ்டிரிப் மற்றும் ஹூக்குகள் தைத்த சேலை, மூன்று துண்டுகளாய்ப் பிரிந்து மூன்றே நிமிடத்தில் அணிய முடியும் சேலை.... இவை தவிர கைப்பை தேவையில்லாதபடி பாக்கெட் வைத்த சுரிதார்கள், அழகிய மேலாடைகள், நெடும் பயணம் செய்யும் போது இயற்கை உபாதைகளை வெளிப்படுத்த விடாத உள்ளாடைகள் என்று அவர் வடிவமைத்த உடைகள் பெண்களிடையே பிரபலம்.

மேலும் அவர் வடிவமைத்த இருபாலார் அணியும் பள்ளிச் சீருடைகள் அரசுப் பள்ளியிலேயே அங்கீகாரம் பெற்றன.

“எப்படி பெண்களோட தேவையை புரிஞ்சிகிட்டு அதுக்கேத்தாப் போல டிசைன் பண்ண முடியுது?”

இந்தக் கேள்வியை ஷீபா மட்டுமல்ல, நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். நிறைய முறையும் கேட்டிருக்கிறார்கள். ஷீபாவே பல முறை கேட்டிருக்கிறாள்.

கௌரிசங்கர் அன்றைக்குப் பேசுகிற மனநிலையில்தான் இருந்தார். ஷீபா அவருக்கு நல்ல தோழி. தோழி கேட்டால் சொல்லாமல் இருப்பதாவது?

“எல்லாம் அனுபவம்தான்; தெரிஞ்சிக்கணுமா? ”

அந்த “தெரிஞ்சிக்கணுமா?” - அது ஒரு உறுத்தலான அனுபவம் என்பதை சொல்லாமல் சொல்லியது. ஷீபாவின் கண்கள் ஆர்வத்தில் மின்னின. “ உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா என் கிட்ட சொல்லுங்க, நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் !”

இருவரும் வசதியாக சாய்ந்து அமர்ந்தனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பதினான்கு வயதான கௌரிசங்கரின் பொழுது தொடங்குவது அம்மா மீனாட்சி கொண்டு வந்து தரும் காபியை குடித்த பிறகுதான்.

சில சமயம் காபி அதிகாலை நான்கு மணிக்கே கிடைக்கும்; சில சமயம் ஏழு மணி கூட ஆகும். எல்லாம் அவன் அப்பா விஜயராகவனின் அன்றைய வேலைகளைப் பொறுத்தது.

அவன் அப்பா பணி நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்வார். அதற்காக அதிகாலை எழுந்து கிளம்பும் போது நான்கு மணிக்கு வரும் காபி அவர் ஓய்வாக வீட்டிலிருந்து ஆறரைக்கு எழும்போது ஏழு மணிக்கு இவனுக்கும் வரும்.

எப்படியிருந்தாலும் கௌரிசங்கர் தனது நாளை தெளிவாக, சுறுசுறுப்புடன்தான் தொடங்குவான்.

அன்று ஏனோ ஒரு குழப்பம்...

உள்ளுக்குள் ஏதோ நீர் நிரம்பியதைப் போல...! வேகம் பிடித்த பஸ் ஒரு புறம் சாய்வதைப் போல...!

காபியை வாங்கியும் குடிக்க முடியவில்லை.

டம்ளரைக் கொண்டு போக அம்மா வந்தபோது “ அம்மா “ என்று கூவி அவள் நெஞ்சில் புதைந்து கொண்டான்.

அம்மா அவனை நிமிர்த்தினாள். “ என்னடா?“ என்றாள். நெற்றியிலும் நெஞ்சிலும் கை வைத்துப் பார்த்து விட்டு போய் விட்டாள்.

அது அப்படித்தான் தொடங்கியது.

சில நாட்கள் கழிந்தன.

கௌரிசங்கருக்கு ஆண் பிள்ளைகளின் அருகாமை சங்கடத்தைக் கொடுத்தது. அம்மாவிடம் நிறைய நேரம் செலவழித்தான். தங்கை அபிராமியை அடிக்கடி உன்னிப்பாக கவனித்தான்.

அடிக்கடி தனிமையில் கண்ணாடி முன் நின்றான். அம்மாவின் புடவையை சுற்றிக்கொண்டு பொட்டு வைத்துக் கொள்வான். அப்படி ஒரு தடவை புடவை சுற்றிக் கொண்டிருந்த போது அபிராமி பார்த்து விட்டாள். சரேலென்று புடவையை தூக்கி எறிந்தான். அபிராமி வேறு சிந்தனையில் இருந்ததால் இதற்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை.

நாளாக ஆக....

அவன் நடையில் நெளிவுகள் தோன்றின. அவனுக்குக் குரல் உடைபடவில்லை என்றாலும் கீச்சுத்தன்மை அதிகமானது. அவன் தாயைப் போன்றே வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பித்தான்.


குடும்பம் பதறியது அப்போதுதான்...!


உட்கார வைத்து உபதேசம் செய்தார்கள். “ அடச் சீ, எடு ! ” என்றார்கள். “இப்படியெல்லாம் பண்ணே, முதுகுத்தோலை உரிச்சுடுவேன் ” என்றார்கள்.

நாலு பேர் பார்க்கவே புடவை கட்டிக் கொண்டான். படுக்கையில் புடவை கட்டின மேனிக்கு அழுது கொண்டே கழிந்தன அவனுடைய இரவுகள்......!

அக்கம் பக்கம் குறுகுறுவென்று நோட்டமிட்டது இப்போது.

பெண்கள் அவனை ஏளனமாகப் பார்த்து விலகினர்.

வயது வித்தியாசமில்லாமல் பொடிசு முதல் பெரிசு வரை ஆண்கள் அவனைப் பார்த்து அசிங்கமாக சைகை செய்தார்கள். சில பெரிய பசங்கள் அவன் கையைப் பிடித்து ஒதுக்குப்புறமாக கூட்டிப் போனார்கள். உடைக்குள் மேய்கிற கையை உதறித் தள்ளி விட்டு ஓடி வருவான். சில சமயம் சிலையென நின்று விடுவான். அப்போதெல்லாம் அபிராமி சொல்லி அம்மாவோ அப்பாவோ கையில் கோலுடன் வருவார்கள். எதிராளியை நாலு போடு போட்டு விட்டு அவனை அழைத்துப் போவார்கள்.

ஒரு சமயம் அபிராமியே அவனை மீட்டு அழைத்துப் போனாள்.

அவமானம் தாங்காமல் மூட்டைபூச்சி மருந்து குடித்தான்.

மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். டாக்டர் தீப்தி. என்டோக்ரைனாலஜி என்னும் நாளமில்லா சுரப்பியியல் துறை நிபுணர்.

உயிரைக் காப்பாற்றியதோடு காரணத்தையும் துருவினார்.

இரத்தப் பரிசோதனை செய்ததில் பையன்கள் உடம்பில் சிறிதளவே சுரக்கும் ஒரு வகை பெண் ஹார்மோன் அவன் உடலில் முப்பது மடங்கு அதிகமாகச் சுரக்கிறது என்று கண்டறியப்பட்டது.

“ டாக்டர், எந்த ஜென்மத்துப் பாவமோ, இவனை என்ன பண்றது? எங்கேயாவது சேர்த்துடலாமா?”

கௌரிசங்கரின் அப்பா பையன் எதிரிலேயே தலையில் அடித்துக் கொண்டு கேட்டார்.

“அப்ப இவனோட அம்மாவை என்ன செய்வீங்க? ”

தீப்தி கேட்டார்.

“அம்மா எங்கே இங்க வந்தா? ”

“ இல்ல, இவனோட அம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்குன்னீங்க. சர்க்கரை வியாதி ஒரு ஹார்மோன் குழப்பம். இருந்தாலும் அவங்களை நீங்க திட்டுறதில்லே; வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்றதில்லே..ட்ரீட்மெண்ட் கொடுக்கறீங்க. அதே போலத் தானே இவனுக்கும் செய்யணும்.. இவனுக்கு வந்திருக்கிறதும் ஹார்மோன் குழப்பம்தான். அந்த குழப்பத்துக்கு நீங்களும் ஒரு காரணம்தான்... ! ”

“ என்ன சொல்றீங்க? ”

“ இந்த காலத்துல வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கு. இல்லேங்கல. விந்தணுக்கள் தரம் கீழே போயிடுச்சு. உடம்பு சூட்டையே தாங்காதுங்கிறதாலதான் விந்துப்பை உடம்பை விட்டு ஒரு விரற்கடை தள்ளி அமைஞ்சிருக்கு. இறுக்கமா போடுற பேண்ட், வெப்ப சூழ்நிலை, உட்கார்ந்தே இருக்கற வேலை, டூ வீலர் ஓட்டுறது- இதெல்லாம் விந்தணுக்களை பாதிக்குது. பாதித்த விந்து பையனா மாறும் போது ஹார்மோன் பிறழ்வு ஏற்படத்தானே செய்யும்? ”

அப்பா ஆச்சரியப்பட்டார். கௌரிசங்கரும்தான்.

“ தம்பி ”, கௌரிசங்கரைப் பார்த்து கேட்டார் டாக்டர்.

“ இது உன் உடம்பு. நீதான் எஜமான். உன் விருப்பம் போல வாழ்க்கையை அமைச்சுக்க உனக்கு சுதந்திரம் இருக்கு. ஆனா, இந்த மாற்றம் நீ எடுத்த முடிவு இல்ல. ஹார்மோனோட வேலை. அந்த ஹார்மோன் உன்னை முழு பெண்ணா மாற்றாது. ஆனா நீ நினைச்சா உன்னால முழு ஆணா மாற முடியும். சொல்லு... நீ அரைகுறை கௌரியா இருக்கியா? இல்ல முழு கௌரிசங்கரா ஆகப் போறியா? ”

கௌரிசங்கர் வைத்தியத்துக்கு ஒப்புக்கொண்டாலும் ஒரு இரண்டு வாரங்கள் அவனை குண்டுகட்டாய் தூக்கிக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது. மாத்திரைகளை கொஞ்சி, கெஞ்சி அடித்து மிரட்டித்தான் தர வேண்டியிருந்தது. ஒரு முறை வீட்டை விட்டு ஓடிப் போனான். கண்டு பிடித்து அழைத்து வந்தனர்.

அன்று எப்போதும் போல் கண் விழித்த கௌரிசங்கருக்கு ஓர் அதிர்ச்சி.

புடவை தவிர வேறு எதுவும் கட்டாத அம்மா அன்று காது மூக்கு கழுத்தில் எதுவும் போடாமல் கிராப் தலையோடு பேண்ட் சட்டையில் இருந்தார்.

பெண் என்ற பிம்பத்தில் அம்மாவைத்தான் வைத்திருந்தான் கௌரிசங்கர். அம்மாவின் நடை, உடை பாவனை ஆண்பிள்ளைத் தனமாக மாறினால் நாலு பேர் சகிக்கிற மாதிரி அவன் பழக்கமும் மாறும்; அதனால் அவன் தினசரி வேலைகள் மற்றும் படிப்பு செவ்வனே நடக்கும் என்று டாக்டர் சொல்லி இந்த ஏற்பாடு.

அம்மா பேண்ட்டு சட்டையில் காலையில் சௌகரியமாகத் தெரிந்தாலும் நாள் முடிவில் அப்படியில்லை என்று உணர்ந்தான் கௌரிசங்கர். அவன் அம்மாவுக்கு சிறுநீர் தானாக வெளியேறும் உபத்திரவம் இருந்தது. உடம்போடு ஒட்டிய பேண்ட்டு உள்ளே புண்ணாக்குகிறது என்று தெரிந்தது.

இருப்பினும் அம்மா சேலைக்குப் போகவில்லை.

அடுத்த மாற்றம் பள்ளியில் நிகழ்ந்தது. இருபாலார் படிக்கிற அவன் பள்ளியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே வித சீருடை என்று கொண்டு வரப்பட்டது. அதிலும் சௌகரியங்கள், பிரசினைகள் வரத்தான் செய்தன. இதுவும் டாக்டர் தீப்தியின் ஏற்பாடு என்று பின்னர் தெரிந்தது.

ஒன்றரை வருடம் வைத்தியம் தொடர்ந்தது. கௌரிசங்கர் நாட்டியப் பள்ளியில் சேர்ந்தான். நாளடைவில் நாட்டியம் பிடிக்கவில்லை. கராத்தே வகுப்பு மாறினான். தங்கையை கேலி செய்த ஒருவனை போட்டு சாத்தினான். குரல் உடைந்து ஆண் பிள்ளைத்தனம் வந்தது. அரும்பாய் மீசையும் முள்ளாய் தாடியும் முளைத்தன. அம்மா மேல் பாசம் அதிகரித்தது. அதே சமயம் நான்கெட்டு தள்ளி நின்றான். டாக்டர் தீப்தியுடன் கை குலுக்கும் போது லேசாக சங்கோஜப்பட்டான். அப்பா ஷேவ் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தார். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை அப்பாவுக்குத் தோழனானான்.

........................................................................................................................................................................................................
இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார் கௌரிசங்கர்.

“அந்த ஒன்றரை வருடத்தில நான் ஆணாவும் பெண்ணாவும் மாறி மாறி அலை பாஞ்சேன். அதுக்கு ஏத்தா மாதிரி உடுப்பு போட்டேன். எங்கம்மா சும்மா சொல்லக் கூடாது- நான் சரியாகிற வரை பாண்ட்டு சட்டை வேட்டின்னுதான் கட்டுனாங்க. எந்த உடுப்புல என்ன நெருடல்ன்னு எனக்கு அப்போ கிடைச்ச அனுபவம், இப்போ..... ”

“ஒரு வெற்றிகரமான ஃபேஷன் டிசைனரா மாற்றியிருக்கு”- வாக்கியத்தை முடித்தாள் ஷீபா.

“ அருமையான டாக்டர், அருமையான குடும்பம் ! .................. சரிங்க. உங்க மனைவி, உங்க மகள் தீப்தி, பையன் சுதாகர்- எல்லோரையும் அழைச்சிட்டு பார்ட்டிக்கு வந்துடுங்க ” - விடை பெற்றாள் ஷீபா.


முற்றும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (13-May-15, 12:59 pm)
பார்வை : 534

மேலே