பித்தனின் கதையா இது
அது காலை மணி 10 என்றால்,அந்த காலப்போக்கன் கூட கதை என்று சொல்லிவிடுவான்.ஆம்...அப்படித்தான் வானம் அன்றைய பகலிலும் கூட,
தன் நேற்றைய படுக்கையைச் சுருட்டி வைக்க மனமின்றி மயங்கிக்கிடந்தது.நேற்று பெய்த பேய்மழை ஊரையே சோகத்தில் மூழ்கச் செய்துவிட்டுப் போனதன்
பிம்பங்கள் ஆங்காங்கே உருண்டோடிக் கொண்டிருந்தன.
கூட்டம் கூட்டமாய் மக்கள் நடையும்,ஓட்டமுமாய் கிழக்கேவுள்ள சோக்காலிபுறத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.கண்ணில் அழுகையும்,நெஞ்சில் பாரமுமாய்
ராமாயின் வீட்டிற்குள் எல்லாம் நுழைந்தனர்.
சாரமழ பேயனுன்னு,
சாமிகிட்ட வேண்டிகிட்டோம்..
கோரமழ பேயவெட்சு,
சாமிஉன்ன கூடிக்குச்சோ..-கிழவியின் இந்த ஒப்பாரி அங்கே கூடியிருந்த பலரின் கண்களில் கண்ணீரை தட்டி வரவழைத்திருக்கக் கூடும்.ஆம்....சோக்காலிபுரமே அன்று
சோகத்தில் தான் மூழ்கிக்கிடந்தது.அந்த ஊரின் பிரதிநிதியாக இல்லாவிட்டால் இந்த ராமாயியை அறிந்திருக்கப் போவதில்லை.10 வருடத்திற்கு முன்னால் மதுரையின் ஏதோவொரு கோட்டத்திலிருந்து,சோக்காலிபுரத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்தவள் தான் அவள்.நாடோடிகளின் பிரதிநிதியாகக் கூட சொல்லலாம்.அசேதனப் பொருட்களுக்கெல்லாம்
இடம் கொடுத்த இந்த ஊரானது அவளுக்கு என் வீட்டின் எதிரே உள்ள தொழுவத்தில் ஒரு இடம் கொடுத்ததில் எந்த ஆச்சரியமும் எவற்கும் இல்லை.
எங்கள் ஊரின் எல்லோரது பிரமிப்புக்கும் பெயர் போனவள் தான் அவள்.அப்படி என்ன பிரமிப்பு என்கிறீர்களா?..ம்..நீங்கள் அவள் சாப்பிட்டு பார்த்ததில்லை...
சாப்பிடுவாள் என்றால் அது தவறாகிவிடும்.உலகின் எல்லா பிரமிப்புகளுக்கும் கடைசி நிலைக்கு ஒரு பெயர் இருக்குமானால்,அது அவள் தான்.அப்படித்தான் சாப்பிடுவாள்.
பொருள்,புகழ்..எத்தனை எத்தனையோ தேடலின் இடையே உணவை ஒரு தேவையாய் பார்க்கும் கண்களுக்கு,உணவை தன் ஆதாரப் பொருளாய் தேடும் என்னவளை
கவனித்திருக்க வாய்ப்பில்லை.அது அவளின் தேடல்..அவளான தேடல்..
விசேஷ வீடுகள் என்றால்,அது முடியும் வரை இருந்து,மிச்சம் மீதியாய் கிடைக்கும் அத்துனையும் வாங்கிக் கொள்வாள்.அதே போல ஊரில் உள்ள எல்லா வீடுகளின் அன்றைய மீதம்,பழையது என எல்லாம்,அவளின் அன்றைய பசியைத் தீர்ப்பதில் தோற்றுத்தான் போகும்.அவள் கண்களை நீங்கள் பார்த்ததில்லையே?
அதில் என்றுமே தீர்க்கமுடியாத பசியின் ஏக்கம் தெரியும்.எல்லோர் வீட்டிலும்,அவர்கள் சொல்லும் எல்லா வேலையையும் செய்து முடிப்பவளுக்கு
அவர்கள் போடும் சோறு மட்டுமே அவளை ஆத்மார்த்தப்பட வைக்கும்.வேறு எந்த பொருளும் அவள் மனதை ஒன்றும் பெரிதாய் குளிர வைக்கப் போவதில்லை.
அன்று ஒரு நாள்,என் வீட்டில் என்னுடைய அத்தைக்கு வளைக்காப்பு சீர்.ஊரையே கூட்டி தடபுடலா வளைக்காப்பு நடத்திவிட்ட மகிழ்ச்சியில் என் அம்மாவோ
அங்கும் இங்குமாய் ஓட்க்கொண்டிருந்தாள்.யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்தேன்.ஆம்....ஆவளே தான்.
"ராமாயி வந்துருக்கேன்னு...அம்மாகிட்ட போய் சொல்லு ஐயாகு...."என்று அவள் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அம்மா வந்துவிட்டாள்.
"பந்தி முடிய இன்னும் ரெண்டு மணி நேரமாவது ஆவும்..போய் கட்டுத்தொரைல நில்லு...கூப்புறேன்.."என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.
சொல்ல மறந்துட்டேன் பாரு..அவளை நீங்கள் பார்த்ததில்லையே??..ராமாயி..சாதாரணப் பெண்களைப் பார்க்கையில்,நல்ல அசாதாரண உடம்புதான்.
அகன்ற தோல்ப்பட்டை,நல்ல வெளீரிய சரீரம்,நடு வயதைத் தொட்டுவிட்டால் வருமே ஒரு வாடை..ஆம்..அந்த இளம் கொச்சை வாடையே தான்!!
(என்னவோ..இதை எழுதும் போதே அந்த வாடை நாசித்துருவங்களை நிரப்பி என் ஆஸ்ட்ரொஜென் அளவை அதிகரிக்கிறது.)
வந்த சொந்தங்களையும்,பந்தங்களையும் அனுப்பி வைப்பதற்க்குள் மணி 5க்கு மேல் ஆகிவிட்டது.நானோ மறந்தே போயிருந்தேன்.வீட்டின்
பின்புறமுள்ள மாட்டுத்தொழுவத்தில் தொடங்கியிருக்குமே!!என் ராமாயின் போஜனம். முடிருந்திருக்குமோ??இல்லை...இல்லை..என்னை நானே
ஆறுதல் படுத்திக்கொண்டு ஓடினேன்.
ம்ஹூம்..சூரியனை இன்னும் முழுதாய் உள்வாங்காமல் வானம் அதன் அழகில் லயித்துக் கொண்டிருந்தது.கட்டாந் தரையில்,முக்கால் வட்டமாய்
கடை பரப்பி உட்கார்ந்துக் கொண்டிருந்தாள்.தன் மார்பு சேலை விலகியதைக் கூட சற்றும் கவனிக்காதவளாய்..உலகின் எந்த பார்வையும் அவள் மீதே
படாதாளாய்..ஏன்,அவள் பார்வை கூட அவள் மீதே படாதாளாய்...கூட்டு,வத்தல்,சோறு,குழம்பு, என ஆரம்பித்து பல மெட்டுக்கட்டிப் பாடிக்கொண்டிருந்தாள்.
நல்லப் பாடலின் முடிவை அறிய எவனுக்குத்தான் மனம் வரும்?அந்த கடைசியாய் இலையில் ஒடிய ரசத்தை கையில் வளித்து முன்னும் பின்னுமாய்
நாக்கில் வளித்துத் தேய்க்கும் காட்சிக்கு எந்த முத்தான கவி உவமை காட்டிவிட முடியும்?
அவள் கண்களை நான் பார்க்கிறேன்.இன்னும் தீர்க்கப்படாத பசி...யாரிவள்?உலகை முற்றிலும் திண்ண வந்தாளா என்ன?
அன்றிரவு ஒதிய மரங்கள் ஒய்யாறமாய் ஒன்றை ஒன்று தழுவி முத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததை,ஏனோ கண்கள் உதறிவிட்டு அவள் தூங்கிக்
கொண்டிருக்கும் தொழுவத்தின் மீது பாய்த்தேன்.ஆம்..தூங்கிக் கொண்டிருக்கிறாள்.எப்படி வாயைத் திறந்துக் கொண்டே தூங்குகிறாள்.காற்றை உணவாக்கிக்
கொள்ளும் வித்தையை அறிந்தவள் போலல்லவா தூங்குகிறாள்.உலகின் முதல் ஆதரமாய்,உயிரோட்டமாய் உணவை கண்டு கொண்ட செருக்கில் எப்படி தூங்குகிறாள் தெரியுமா?ஓ..சொப்பனம் காண்கிறாளோ?அப்படி என்ன காண்பாள்?என் பலநாள் கனவுகளை
அவள் ஆட்க்கொண்டது போல் இல்லாவிட்டாலும்,ஒரிரு காட்சிகளிலாவது நான் வருவேனா?
"ஆமாம்..நான் என்ன பெரிய மவராசனா?இல்ல தினமும் பொங்கித் திண்ணும் சோறா?" என்னை நானே செல்லமாய் கோபித்துக் கொண்டேன்.
இன்றோ அதை எல்லாம் நினைக்கையில் கண்களில் ஏனோ கண்ணீர் தாரை தாரையை வருகிறது.
எவ்வளவோ மனிதர்களை தின்றும் செரிக்காத காலவேடன் பசியின் முன்பு இவள் இன்று தோற்றுவிட்டாளோ?இருக்காது..நீங்கள் யாரும் அவள் கண்களைப்
பார்த்ததில்லை.தோற்றிருக்கமாட்டாள்…என் அறிவியல் பாட்டன் நியூட்டன் சரியென்றால்,அவளின் அந்த பசியின் பிம்பத்தையாவது மாற்றானிடம் மாற்றிவிட்டுத்தான் சென்றிருப்பாள். அப்படி எளிதில் தொலைத்துவிடுவாளா என்ன?அவள் பசியை..அதன் தேடலை..அதன் வேட்க்கையை..ம்ஹூம்..இருக்கவே இருக்காது.
காற்றில் தான் அணையப் போவதை ஊதுப்பத்திகள்,வாழைப் பழத்தின் மீது ஒய்யாறாமாய் அமர்ந்து ஓதிக்கொண்டிருந்தன.
எங்கோ கேட்கிறதே..?என் உள்ளத்தின் மிகவும் பரிட்சையமான குரல்..அழுகையை தன் துணிகளுக்கு நனைக்கக் கொடுத்திருந்த மக்கள் கூட்டத்தை விலக்கிக்
கொண்டு நான் ஓடுகிறேன்..தெருக்களை நோட்டமிடுகிறேன்..அந்த குரலின் திசையைத் தேடுகிறேன்..நேற்றைய இயற்க்கை பதுவுகளில் சிலசில மாற்றங்கள்
இருந்தும் கூட,தெருக்கள் அப்படியேத் தான் இருக்கிறது. அப்படி இருந்தாலும் அந்த குரல் ஏதோ ஒரு திசையில் கேட்கிறதே?..அதுவும் அவளின் குரல் போல் அல்லவா
இருக்கிறது..
"ஐயா..அந்த பழத்தையாவது தாங்கயா..நேத்து காலைல சாப்டது.." என்ற குரலைக் கேட்டு திரும்பிய நான், அழுது வடிந்த என் முகத்தைத் துடைத்துக் கொண்டு
தெருக்களில் அங்கும் இங்குமாய் ஓடுகிறேன்..
பித்தன் எங்கோ ஓடுகிறான் பார்..அவனை பிடி..என்று என் பின்னால் ஒரு கூட்டம்..
-வ.பாரி இளஞ்செழியன்