மானங்கெட்டவர்க்கே மரியாதை அதிகம்- போட்டிக் கவிதை
வேகாத வெயிலில்
வரிசையில் நின்று
கையில் மை இட்டுக் கொண்டவர்கள்
முகத்தில் கரி அப்பிக் கொண்டு
பற்றி எரியும் வயிறோடு
மானமுள்ளவர்களாய்.
பசிக்கு பன்னை திருடியவன்
பத்து நாள் காவலில்
சைக்கிளில் மணி இல்லாமல் சென்றவனுக்கு
சட்டப்படி அபராதம்...
தண்டனைகளை ஏற்று கொண்டவர்கள்
மானமுடன் கண்ணீரோடு...
முழுப் பூசணிக்காயை
பருக்கை சோற்றில் மறைத்து
"பூசணியா இல்லவே இல்லை..."
சொன்னதற்கு பக்க தாளங்கள்
பக்கா தாளங்கள்
வகை வகையாய்...
வாரி சுருட்டி ஏப்பம் விட்டும்
பசியடங்காத மானம் கெட்டவர்கள்..
தர்மம் காக்கப்பட வேண்டிய இடத்தில
கதறியபடி
"வாய்மையே வெல்லும்"
வாசகப் பலகை...
"நல்ல வேளை
என் கண்களை கட்டிவிட்டார்கள்"
நீதி தேவதை
ஆறுதல் அடைந்து கொண்டிருக்கிறாள்...
எங்களை அப்புறப் படுத்துங்கள்
தேசப் பிதாக்களின் படங்கள்
மெளனமாக அலறுகின்றது
தர்மக் கொலைகளை நேரில் கண்டு...
எது எப்படி போனால்
எங்களுக்கென்ன??
விலைக்கு வாங்க மலையாக பணம்...
உலகையே வாங்குவோம்
விற்பவரை மட்டும் சொல்லுங்கள்.
சுலபமாய் சம்பாதிப்பது எப்படி??
விளங்க வைக்கும்
விளங்காத பாடம்..
மானமுள்ளவர்களே
விழிப்புடன் இருங்கள்
அடுத்து நைந்திருக்கும்
உங்களின் ஆடைகளும் உருவப்படலாம்
இன்னமும் உருவுவதற்கு
அது ஒன்றுதான் மிச்சமிருக்கிறது
சுதந்திரமான நாட்டில்
தந்திரமுடன் விளங்கும்
மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனசாட்சி கொன்றவர்க்கே
பொருட்செல்வம் குவியும்
(இதனை எழுதத் தூண்டிய திரு மலர் அய்யா அவர்களுக்கு எனது நன்றிகள்)