மியா மியாவும் தவளைக்கால் சூப்பும்

எப்படிச் சொல்வது
இன்னமும் யோசித்துக்
கொணடே இருந்தேன்
முதல் முறையாக
பணியில் அவள்
அறிமுகமானபோது
பெயர் கேட்டு
சற்றுத் தடுமாறி
நின்ற அதிர்ச்சி
தொடர்ந்து
அவளுடன் பழகும் போது
காணாமல் போனது.


இடைவேளைகளில்
அவள் பகிர்ந்து கொள்ளும்
பல விடயங்கள்
பயனுள்ளதாய்
சுவாரஸ்யமாய்..
தொழில் சார்ந்தவையும்
சாராதவையுமாய் ...
கொரிய யுத்தம்
மாவோ கவிதைகள்
கலாச்சாரப் புரட்சி
யாங்சே நதி
தலாய் லாமா... என
அவளிடம் இருந்து
அறிந்தவை பல

இருந்தாலும்
உணவுப்
பழக்கம் மட்டும்
இனம் புரியாத
ஓர் இடை வெளியை
ஏற்படுத்திக்
கொண்டே இருந்தது
எப்படிச் சொல்ல...
பலர் உணவருந்தும்
இடத்தில் பொதுவான
உணவுப் பழக்கத்தை
கைக் கொண்டால் என்ன..

இன்று சொல்லிவிடலாமா
காலையில் கணணியை
திறந்த போது
சுற்றறிக்கை
ஒன்று காத்திருந்தது
மிய மியா லியு
பதவி உயர்வு பெற்று
மறுபடியும் சீனா
செல்ல உள்ளதாக...

ஒரு நல்ல மனதை
காயப் படுத்தாமல்
விட்டதற்கு
கடவுளிடம் நன்றி கூறி
அவளை வாழ்த்தச்
செல்கிறேன்...

எழுதியவர் : உமை (18-May-15, 12:28 am)
பார்வை : 104

மேலே