பூர்வீக வீடு
புழுதி கலையாத
திண்ணை.
பூத்துச்
சிலிர்த்திருக்கும்
முற்றத்து வேம்பு.
கோரைப் புற்
தாடிகளுக்கிடையே
எட்டிப் பார்க்கும்
முகச்சவரம்
செய்யாத துளசி மாடம்.
இறைந்து கிடக்கும்
சருகுகளின் கீழ்
உறங்கிக்
கிடக்கின்றன
அவர்களின்
உயிரோட்டமான
பாதத்து ரேகைகள்.
வாசலைத்தாண்டி
உள் நுழையும்
வைகாசி மாத
வெப்பக் காற்று
எந்தச் சுவாசத்தையும்
காவாது
வெறுமையுடன்
திரும்புகிறது.
நிலாச்சோறு
உண்ட நாட்களில்
விழுங்கியது பாதி
உமிழ்ந்தது மீதி
இந்த முல்லைச்
செடிக்கு மட்டும் தெரியும்.
அது இன்னும்
என் ஞாபகத்தில்
ஓரிரு பூக்கள்
தாங்கி
உயிரோடு...
சாயங்காலங்களில்
களை கட்டும்
தாத்தாவின்
சங்கீதக் கொட்டகையில்
ஆறேழு ஆடுகள்
இரை மீட்டபடி..
சிதறிக் கிடக்கும்
ஆட்டுப்
பிழுக்கைகளை
விலக்கி
எப்போதும்
தாத்தா அமரும்
கல்மணையைத்
தேடிக்
கொண்டிருக்கின்றேன்..
"அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது - தமிழ்
இறைவனாரின்
திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா"...
என் தலை வருடி
அசையும் காற்றில்
அரூபமாய் அந்தப்
பாடல் சுருதிமாறாது
கொல்லைப் புற
பூ நெல்லி மரத்தில்
கூவும் குயில்
ஒன்றின்
ஒற்றைக் குரலில்
குழைந்து கலக்கிறது..
ஞாபகங்களையும்
நினைவுகளையும்
வரலாற்றையும்
வலிய துயர்களையும்
பார்த்து இறுகிக் கிடக்கும்
அந்த வீட்டுக் கதவுகள்
உள்ளே மௌனமாக
அழுது கொண்டிருக்கிறது
பூர்வீகம் எனும்
விளக்கு..