அழகு

அழகிய சொல்லெடுத்து
அடுக்கடுக்காய் அடுக்கிவைத்து
அழகின் அழகை
அணிவகுக்க”வா”ஆராதிக்க”வா”

எண்ணற்ற வண்ணங்களை
ஏகாந்த தூரிகையில்
எடுத்தெடுத்து தொடுத்து
எழிலழகாய் வார்த்தெடுத்து

இவ்வுலகம் முழுவதையும்
இன்பமதில் மூழ்கடித்து
இனங்கானா இதங்களில்
இளையோடச் செய்யும்

அழகினை
அள்ளிப் பருக”வா”
ஆசைதீர
அனுபவிக்க”வா”

அகம்பொங்க அள்ளியணைத்து
அன்னமென்னும் அமுதூட்டும்
அன்னை அணைப்பிலூறும்
அன்பில்!

உணர்வுஊற உள்ளம்நிறைத்து
மனதைகொடுத்து மனதைபெற்று
நிழலாய்தொடரும் நினைவின்வருடலில்
காதலில்!

பெண்வீணையை ஆணிசைக்க
ஆலிங்கனம் சுரம்சேர்க்க
இல்லறம் ஒலிக்கும் ஓசையில்
தாம்பத்தியத்தில்!

இறப்பொன்றை எடுத்துகாட்டி
இன்னோருயிர் உலகில்
பிறக்கும் தருணத்தில்
உணர்வில்

தொண்டைக்குழியை துயரமடைத்து
துன்பக்கடலில் நீந்துகையில்
கொஞ்சும்மொழியால் துயர்நீக்கும்
மழலையில்!

வெக்கத்தில் முகம் சிவந்து
முந்தானையதில் முகம்மூடி
நாணமது நாணிநிற்கும் வேளையில்
பெண்மையில்!

மனம் விம்ம விழி முட்ட
மருகி மருகி வழியும்
கன்னத்து நிலப்பரப்பில்
கண்ணீரில்

மெல்ல தழுவி
மேனி வருடும்
தென்றலின் ஸ்பரிசமதில்!

உச்சி மலையிலிருந்து
உருண்டு வழிந்தோடும்
வெள்ளையருவியின் சாரலில்!

மேகம்
மோகம்கொள்ளும் வேளையில்!
காற்று
கானம் பாடும் மாலையில்!

வெண்ணிலா
உலாப்போகும் வானவீதியில்!
மழை
மண்ணை துணைத்தேடும் போதினில்!

இரவு
இருளை தழுவும் சாமத்தில்!
பூக்கள்
பனியில் குளிக்கும் நேரத்தில்!

விழி பார்க்க மனமீர்க்க
வியப்பின் உச்சத்தில்
அழகின் அழகு
ஆர்ப்பரிக்குதடி! ஆரத்தழுவுதடி!

பொய்யழகும் பளபளக்குதடி
பொல்லா மாயையையும் கவருதடி!
மெய்யழகு மினுமினுக்குதடி
மெய்சிலிர்க்க உணர்வும் லயிக்குதடி!

இருவிழிகள் வியக்கும்படி
இயற்கையழகு சுழலுதடி!
இறைவன் படைப்பில் மனிதயினம்
இன்றியமையா அழகாய் அமைந்தடி!

பிறப்பில் தொடங்கி இறப்புவரை
பறைசாட்டல்கள் பல தெரியுமடி!
பாரெங்கும் பாரடி! தேடடி!
அகம்புறமென -

படைப்புகள் அனைத்தும்
அழகின் அம்சமடி!
படைத்தவனை புகழ்ந்து பாராட்டி
பா”க்கள் பாடி மனம் மகிழட்டுமடி..

எழுதியவர் : அன்புடன் மலிக்கா (17-May-15, 10:58 am)
சேர்த்தது : அன்புடன் மலிக்கா
பார்வை : 607

மேலே