மானங் கெட்டவர்க்கே மரியாதை அதிகம் - போட்டிக் கவிதை
கள்ளுண்ட போதையிலே
தள்ளாடி உடல்தளர்ந்து
நடைபின்னி வாய்க்குழற
உடையவிழ்ந்து உணர்விழக்க
பாதையிலே கக்கிவைக்க
பார்த்தவரும் கரித்துக்கொட்ட
வரிந்துக்கட்டி வந்தநண்பர்
வகையாக இருபுறமும்
கையைத்தூக்கி தோளில்போட்டு
கைத்தாங்கலாக அழைத்துச்சென்று
இல்லத்திலே சேர்த்தக்காட்சி
இயம்பிட்டக் கருத்தென்ன ?
மானங் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம் ......!!!
நாடிவந்த நோயாளியை
ஏழையென்றும் பாராமல்
தேவையற்ற பரிசோதனை
தேவையென்று செய்யச்சொல்லும்
"பண"நல மருத்துவரின்
பணம்பண்ணும் வித்தைக்கண்டால்
கொதித்துள்ளம் பொங்கியே
சொல்லிடவே தோன்றிடுதே .....
மனசாட்சி கொன்றவர்க்கே
பொருட்செல்வம் குவியும் .....!!!