கடந்து போன பொக்கிஷம்

21.05.2015
அம்மா,
நெற்றி சுருங்க ,விழி இரண்டும் கலங்க ,சுவாச மூச்சு திணற
வாய் அலறி நெஞ்சு குழி வற்றி என்னை ஜனனிப்பதற்கு பட்ட வலி,
வியர்வை தெளித்து,முள் நிலம் கடந்து ,சுள்ளி சுமந்து குடிசையை
அடைந்து உன் இடுப்பிலிருந்து என்னை இறக்கி விட்டு உணர்ந்த வலி,
பள்ளி செல்ல அலறி அழ,முந்தானை முடிஞ்ச சில்லறையில் குருவி ரொட்டி
வாங்கி தந்து, பொடி நடையா வீடு போய் மூச்சிரைக்க உணர்ந்த வலி,
உழைப்பு உறங்கும்போது ஓய,கைரேகையோடு கவலையும் தேய ,உயர்கல்வி
நான் கற்க ஒற்றை விளக்கு கூடத்தில் அருகமர்ந்து விடியும்வரை காற்றசைத்த வலி.
திரும்பி பார்த்து கண்ணீரில் குளித்து உன் காலடி தொழுது சேவகம் செய்ய
நற்கதியற்றவனாய் நிற்கிறேன் ,அரசுத்துறை உயர் அதிகாரியாய்
பூமாலை இட்ட உன் புகைப்படம் முன்பு.
(கற்பனை) ஜெயப்பிரகாஷ் கண்ணன்
காஞ்சிபுரம்