மீண்டும் வேண்டும் அந்த காலம்

எக்காலத்திலும் ஆண் இல்லாமல் பெண்ணோ, பெண் இல்லாமல் ஆணோ வாழ்வது கடினம் தான் அதே சமயம் சரிசமமான அன்பையோ, காதலையோ அனைத்து ஆண்களின் மீது ஒரு பெண்ணோ அல்லது அனைத்து பெண்களின் மீது ஒரு ஆணோ வைக்கவும் முடியாது. வைக்கவும் கூடாது. அன்பை கூட அதிகபட்சமாக அனைவரிடமும் வெளிப்படுத்த முடியும் ஆனால் காதலை கணவரிடமோ அல்லது காதலனிடமோ தான் வெளிப்படுத்த முடியும். இது கட்டுப்பாடு மட்டுமல்ல இதுதான் வாழ்க்கை முறை.

அக்காலத்தில் அனைத்திலும் கட்டுபாடுகள் விதிக்கபட்டிருந்தன. பெரியவர்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் என அனைத்துக்கும் முக்கியத்துவங்கள் கொடுக்கப்பட்டன. சிந்தித்து பாருங்கள் இருபது வருடங்களுக்கு முன் இப்பொழுது உள்ளது போல் கற்பழிப்புகள், கொலைகள் மற்றும் கள்ளத்தொடர்புகள் அதிகளவில் இருந்தனவா நிச்சயமாக கிடையாது. காரணம் பெற்றோர்கள் மீது இருந்த மரியாதை, சமுதாயத்தின் மீது இருந்த பயம், சுயகட்டுபாடுகள் என்று எத்தனையோ நற்பண்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். சில பேர்கள் ஒரே ஒரு பிறப்பு அதை முழுவதுமாக அனுபவித்து வாழ வேண்டும் என்று சொல்லி பார்த்திருப்போம். ஆனால் அவர்கள் நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள், ஒழுக்கம் என்று அனுபவித்து வாழ்கிறார்களா என்று கேட்டால் நமக்கு விடை வெறும் கேள்விக்குறிதான். ஆண்களில் இன்று பலர் உடம்பு பசியுடன் தான் அலைகிறார்கள்.கேட்டால் பெண்கள் தங்கள் உடையில் காட்டும் சிக்கனமும், உடல் ஒட்டிய உடையும் தான் என்கிறார்கள்.இது உண்மையா? அப்படியென்றால் எழு வயது குழந்தையிடமும், ஐந்து வயது குழந்தையிடமும் அவர்கள் மேற்சொன்ன எந்த குறையை கண்டார்கள். குழந்தைகள் கற்பழிப்பும், அதை வெளியே சொல்லி விடுவார்கள் என்று கொலைகளும் ஏன் நடக்கின்றன. ஆண்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்; எந்த மனிதனும் அவனால் அன்றி வேறு எவராலும் கேட்டுபோவதுமில்லை, வழி மாறுவதும் இல்லை. மனக்கட்டுபாடு அவ்வபோது மடிந்து போனதே இதற்கு முக்கிய காரணம். ஊடகங்கள் , கெட்ட நண்பர்கள், வேலையில்லாமல் இருப்பது , நினைப்பது எல்லாம் எளிதாக கிடைப்பது, சாத்தான் பழக்கத்தை கற்பிக்கும் புத்தகங்கள் என்று எத்தனையோ காரணங்களை முன்வைத்தாலும் மனகட்டுப்பாட்டை அனைத்து ஆண்களும் தளர்த்திக்கொண்டதே தற்போது நடந்து கொண்டிருக்கும் பெண்கள் கொடுமைகளுக்கு முக்கிய காரணம்.

முன்னைய காலங்களில் தன் மனைவியைவிட, தன் கணவனை விட அழகான ஆணையோ, பெண்ணையோ பார்த்தால் ஒருவித ஈர்ப்பும், மனபரவசமும் அனைவரிடமும் இருந்ததுதான். ஆனால் மனதில் மட்டுமே அனுபவித்தார்கள். வெளியில் சகோதரனைப்போல, சகோதரியைப்போலவே பார்த்தார்கள். எதிர்பாலரை பார்த்தால் நம்மையறியாமலேயே நம் மனது குதூகலிக்கும்; இது இயற்கை. ஆனால் அந்த குதூகலம் நம் மனதில் குடியிக்கணும்; நாம் எதிர்காலத்தில் அந்த மனிதரை பற்றி சிந்திக்கும்போது ஒரு சந்தோஷ நினைப்பு நிலைத்திருக்க வேண்டுமே தவிர அவரை அனுபவித்து விட்டோம் என்ற நஞ்சு நம் சிந்தனையில் இருக்கவே கூடாது.

ஆடவர்களே! சற்று சிந்தித்து பாருங்கள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு கஷ்டங்களை பட்டிருப்பாள். ஒரு சிலருக்கு திருமணம் முடித்து ரொம்ப நாள் கழித்து குழந்தைகள் பிறக்குது. அப்படி பெற்ற பிள்ளைகளை எப்படி எல்லாம் சித்திரவதைப்படுத்தி, உடல் வதபடுத்தி இறுதியில் கொன்றும் விடுகிறீர்கள். அப்பொழுது அவர்களை பெற்றவர்கள் துடிக்கும் துடிப்புக்கு எந்த ஜென்மத்தில் நீங்கள் பதில் சொல்வீர்கள். ஆண்டவனும், காலமும் மனிதர்களை ஒருபுறம் விதம், விதமாக சோதித்திருக்க இப்போது என்ன உங்கள் இனமான மனித ஜென்மத்தை நீங்களே வதைத்து வாட்டிகொண்டு இருக்கிறீர்கள். இங்கு நீங்கள் உங்கள் பெற்றவர்களையும் மறந்து விடுகிறீர்கள். இந்த மாதிரி இழிவான பிள்ளையாவா என் வயிற்றில் சுமந்தேன் என்று உன் தாய் கதறமாட்டாளா? அது சரி உங்களுக்கு கெட்ட சகவாசங்களும், செய்தால் என்ன தப்பு என்கின்ற எண்ணம் இருக்கும்போது எப்படி தாயும், செய்வது தவறு என்பது எல்லாம் ஞாபகத்திற்கு வரும். நமக்கு அதாவது மனிதர்களாக பிறந்த நமக்கு உடம்பையும் தாண்டி எத்தனயோ விஷயங்கள் இருக்கு. சொந்த பந்தங்கள் கூடி பேசி மகிழ்வது, நண்பர்களுடன் நல்ல படத்துக்கு மற்றும் ஊர் சுற்ற போவது, பிடித்த நல்ல புத்தகங்களை படிப்பது, அறிவை வளர்த்துக்கொள்ள சமூகத்தை உற்று நோக்குவது, சுற்று சூழலை பாதுகாப்பது, பெற்றோருடன் சேர்ந்து கதை பேசிக்கொண்டு உண்ணுவது, காலம் செய்த கோலங்களால் எத்தனையோ பிஞ்சுகள் அனாதைகளாக அநாதை இல்லங்களில் தஞ்சம் அவர்களுக்கு கவலைபடாதீர்கள் சகோதர்களே நான் இருக்கிறேன் என்று சொல்ல வாரம் ஒரு முறை அவர்களை சென்று பார்ப்பது, திருவிழா நாட்களில் சாமி விஷயங்களில் தலையிடுவது போன்ற மனதுக்கு நிம்மதியும், துணிச்சலும் தரக்கூடிய தருணங்கள் இருக்கும்பொழுது எதற்காக உடம்பை நோக்கி பயணம் செய்கிறாய் மானுடனே. நீ செய்து கொண்டிருக்கும் பயணம் நிச்சயமாக மனிதகுல அழிவுக்கே தவிர ஆக்கத்திற்கு இல்லை. பின் என்ன? சந்ததிகளை தரும் பெண் இனங்களை எல்லாம் அழித்தீர்கள் என்றால் பூமியில் மனிதம் இனம் என்று ஒன்று இருந்தது என்பதே மறைந்த வரலாறாகிவிடும்.

ஏ! பாரதி அடுப்பங்கரையில் விழுந்த கிடந்த பெண்களை எல்லாம் இன்று ஒவ்வொரு துறையிலும் சாதிக்கவைத்துவிட்டாய். இப்போது அவர்கள் படும் அல்லல்களுக்கு என்ன வழி சொல்ல போகிறாய்?... ஏ ! ராஜாராம் மோகன்ராய் பெண்கள் உடன் கட்டை ஏறுதலுக்கு அன்று முற்று புள்ளி வைத்தாய். ஆனால் இன்று அவர்கள் தினம் தினம் தீ குளிக்கிறார்களே அதற்கு என்ன தீர்வு சொல்ல போகிறாய். கேள்விகள் கேட்டு எந்த தீர்வுகளும் இல்லாமலே வாழ நாங்கள் பிறப்பெடுத்திருக்கிற போது நீங்கள் என்ன தீர்வுகள் சொல்லி விட போகிறீர்கள்.

பெண்களே இன்றிலிருந்தே ஆடவர்கள் அவர்களது குரூர பார்வை நம்மேல் விழாதபடிக்கும் நம் கலாச்சார ஆடைகளையே அணிய முற்படவேண்டும். இப்படி செய்வதனால் நாம் மட்டும் இல்லை நம் கலாச்சாரமும் காக்கப்படும் பிற்காலத்தில் நம் சந்ததிகளும் அதை பின்பற்றுவார்கள். நாம் உடுத்தும் ஆடைகள்தான் அவர்கள் கண்களை உறுத்துகிறது என்கிறார்கள். நாமும் நாம் உடுத்தும் உடைகளில் கவனம் செலுத்தித்தான் பார்ப்போமே! ஆனால் இனிமேல் உங்கள் கை பைகளில் அழகு சாதனங்களை மட்டும் எடுத்து செல்லாதீர்கள். கூடவே மிளகாய்பொடி, கத்தி, பிளேடு ஆகியவற்றையும் எடுத்து செல்லுங்கள். முடியும்வரை போராடுங்கள் முடியவில்லை என்றால் கொன்று விடுங்கள். தற்காப்புக்காக மிருகங்களை கொள்ள கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை......

திருமதி புவனாபாலா.

எழுதியவர் : திருமதி புவனாபாலா. (21-May-15, 2:57 pm)
சேர்த்தது : bhuvanabala
பார்வை : 327

மேலே