சரவணாவின் - முதுகெலும்பி- வாழ்வியல் தொடர் - ஒரு பார்வை

எழுத்து தளத்தில் கவிதைகளும் கட்டுரைகளும் கதைகளும் பதிக்கபெற்று தமிழார்வலர்களுக்காக சமர்பிக்கப் படுகின்றன. அந்த வரிசையில் நம் அன்புக்குரிய நண்பர் திரு நல்லை சரவணா அவர்கள் கடந்த சில மாதங்களாக "முதுகெலும்பி" என்கிற வாழ்வியல் தொடரை பதிந்து பலரின் பாராட்டுக்களை பெற்றுக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் தளத்தாரின் நல்முயற்சியால் அச்சிலும் ஏற இருக்கிறது என்பது நாம் அறிந்ததே. அந்த தொடரை வாசித்தபின் என் மனதில் பட்ட கருத்துக்களை இங்கு பதிய வேண்டும் என்று நினைத்தேன். இதை விமர்சனம் என்றோ திறனாய்வுக் கட்டுரை என்றெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டாம். நண்பர் திரு பொள்ளாச்சி அபியைப் போன்ற ஜாம்பவான்கள் உலாவருகின்ற இத்தளத்தில் விமர்சனக் கட்டுரை என்று இதை விளிக்க தைரியம் வரவில்லை.
"முதுகெலும்பி" தொடரின் தலைப்பே வித்தியாசமாய்..இது ஒரு தொடர்கதையா..புதினமா..குறுநாவலா எப்படி அழைப்பது ? சரவணா அவர்கள் குறிப்பிட்டிருந்த "வாழ்வியல் தொடர்" என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நாவல்..புதினம்..கதை என்பதில் எதிர்பார்க்கும் நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் உணர்வுகள்..கற்பனை..வர்ணிப்புகள்.. என்பதெல்லாம் இதிலும் காணப்படலாம் என்றாலும், இது முழுக்க கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை..கிராமத்து மண்ணின் மணம், பண்பாடு என்று வாழ்க்கை என்று பல பரிமாணங்களாய் கொட்டி கிடக்கிறது. வாசிக்கும் போது நாமும் அந்த தொடரில் வரும் ஏதாவது மரத்தின் கீழோ அல்லது அதில் வரும் புளியங்கூடு என்கிற சந்திப்பிடத்திலோ ஒரு கதாபாத்திரமாய் உட்கார்ந்து கொண்டுதான் வாசிக்க முடியும்.
"முதுகெலும்பி "என்கிற கதாபாத்திரம்தான் இதன் நாயகன் என்று கூறினாலும் அந்த கிராமமும் மண்ணும் அதன் வாழ்க்கையும்தான் முக்கிய கதாபாத்திரம். முதுகெலும்பி கதை சொல்வதுபோலத்தான் அமைக்கப் பட்டுள்ளது தொடர்.
அறிமுகப் படுத்தும் வரிகளை பாருங்கள் :-
//இந்த ஊருக்கே சோறு போட்ட கதையெல்லாம் பழசு. ஒழைச்சி .. உழுது... வெதச்சி... களைச்சி... கள்ளுகுடிச்சி வாழ்க்கைய பந்தத்தோட பங்கமில்லாம வாழ்ந்திருந்த நாங்க எங்களை பதிவு பண்ணிக்கிறாமெ போய்ட்டமோன்னு ஒரு சின்ன ஆதங்கம். நாங்க முழுசா வதங்குறதுகுள்ள பதிஞ்சிரனுமுங்க. அதுக்குதா எங்கள்ள ஒருத்தனா இந்த முதுகெலும்பிய அனுப்புறோம். இவஞ்சொல்லு.. எங்க சொல்லு. இவங்கருத்து எங்க வாழ்க்கை. எங்க சனத்துல இவம் பெரிய கதை சொல்லி.... படிச்சி பாருங்கப்பு எங்க வாழ்க்கைய....//
இப்போது புரிகின்றதல்லவா இதை ஏன் "வாழ்வியல் தொடர்" என்று அழைக்கவேண்டும் என்று...
'இந்திய கிராமத்தில்தான் வாழ்கிறது' - மகாத்மா சொன்னது . தமிழ் நாட்டின் ஒரு சிறு கிராமத்தின் கதை என்றால் அது பாரதத்தின் கதைதான். பாமர மக்களும் அவர்களின் அன்றாட வாழ்வையும் நிகழ்வுகளாய் நம் கண் முன்னே ஓடவிட்டு நம்மையே அதில் உழலவிட்டுவிடுகிறார் சரவணா. அந்த மக்கள் சிரிக்கும்போது நாமும் அந்த சிரிப்பில் இணைகிறோம்..அவர்களின் கண்ணீரும் .. சோகமும்.. ..நமக்குள்ளும் ஊடுருவுகிறது. அவர்களின் கொண்டாட்டத்தில் சேலையையும் வேட்டியையும் வரிந்து கட்டிக் கொண்டு நாமும் முன்னணியில் நிற்கிறோம்.
மற்றொரு பெரும் சிறப்பு..சொல்லப் பட்டிருக்கும் வட்டார வழக்கு..பொதுவாக வெறும் வட்டார வழக்கு சொற்களை நிரப்பி விடுவதால் கதை தளம் பலமாகி விடும் என்பதில்லை. இந்த படைப்பில் வட்டார வழக்கு உரையாடல்கள் கதையை நகர்த்தும் விதம்தான் இதன் சிறப்பம்சம். கதையில் வரும் பாத்திரங்கள் நிஜமான வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களாக இருக்கலாம் ..அல்லது.. அவற்றில் சாயலில் எழுத்தாளர் படைத்ததாக இருக்கலாம். இந்த தொடரின் கதாபாத்திரங்கள் முழுக்க கற்பனை மட்டும்தான் என்றால் திரு சரவணா அவர்கள் தலையிலடித்து சத்தியம் செய்ய வேண்டி வரலாம்.
வட்டார வழக்கு உரையாடல்களைப் பாருங்கள்:
//ஒருதடவ இதுக்காகவே இழுத்துப் புடிச்சி உக்கார வச்சே..! “ அம்மாச்சி இங்கின வா.. என்னதா ஒங் கத...?” கேட்டே புட்டேன்.. “ அட விடுறா.... போக்.....” “ நா போக்கத்த.... பொசக்கெட்ட பயலாவே இருந்திட்டு போறேன்.. நீ சொல்லுடி கெளவி...” நா கையப்புடிச்சிழுக்க.... நெசமாவே குந்திருச்சி அம்மாச்சி....!
“ இது வரைக்கும் எவனுங் கேட்டதில்லடா...நீ கேக்க....!! உங்கப்புச்சி சொல்லிருப்பானே...பெரியபாண்டின்னு...” அந்த வயசிலையும் அம்மாச்சி மொகத்துல ஒரு மின்னலு மின்னி போனிச்சி...!//
கிராமத்து பெண்மையின் நாணம் எத்தனை வயதானாலும் அப்படியேதான்...
//ஒண்ணு மட்டும் சத்தியமுடா... என்னச் சேத்ததுக்கு அப்புறம் அவுக மூத்தாளு.. அத விட்டா நானு.. வேற எங்கினயும் கஞ்சி குடிக்க மாட்டாரு... நானும் ஆடுன கடேசி ராத்திரியும் அதுதேன்... என்னதா கொடுமழையா இருந்தாலும் மழெக்கி அப்பறம் ஈரஞ்சொட்டுமே மரம். அந்த மாரிதே அவுகளும் நானும். அவுக மூத்தாளும் “ மனுச எங்கங்கயோ உருண்டு பொரண்டுச்சே...இப்பவாச்சும் இங்கின ஒரு எடமா கெடக்கே”ன்னு ஒண்ணுஞ் சொல்லமாட்டாக...அந்த புண்ணியவதிக்கு நாஞ்செஞ்ச துரோகமோ பாவமோ எனக்கு மடி நெறயல.” கொஞ்சமா அழுதிச்சி அம்மாச்சி.//
அந்த கபடமற்ற காதலை பாருங்கள்.. காதலின் மறந்து போன அந்த குற்ற உணர்வை கேளுங்கள்..
//என்னதா மைனர் பவுசாத் திரிஞ்சாலும் அவுகளுக்கு சாதி புடிக்காது. எல்லாப் பயலுகளும் பீத்திக்கிற மாதிரி இவுக பேருக்கு பின்னாடி சாதி போட்டுக்குற மாட்டாக. யாராவது சொல்லிக் கூப்புட்டாலுமே...” அடிங்... வக்காலி...” ன்னு அவுக அம்மாவ இவுக கூட சேத்துவச்சித் திட்டுவாக.. நாகூட ஒரு நாளு செல்லமா கூப்புட்டுப் பாத்தேன். ஆத்தாடி.. அவுக வஞ்ச வசவு இருக்கே.... காதுக்குள்ள எருக்கம்பாலு ஊத்துன மாதிரி எரியும்//
// ஒருநா வந்து கேட்டா..” முதுகெலும்பிண்ணே.... நாமள படைச்ச.... பாத்துக்கிற சாமிக்கி நாம ஆடு குடுக்குறேம்.. கோழி குடுக்குறேம்... அப்ப ஆட்டையும் கோழியும் அவருதான படைச்சாரு.. அவரே படைச்சி அவரே திம்பாரா? அப்பறம் ஏண்ணே.... உசுரா போனது கறியா வருது..? இந்த சினிமாவுல சடக்குன்னு காணாம போயிரும்ல.. அந்த மாதிரி சாமி வந்து எடுத்துக்கிட்டு போக மாட்டாரா? ம்பா.... பதிலு சொல்லத் தெரியாம முழிக்கிற எனக்கு நீர்குழலி சின்ன வயசுல கேட்டது நெனப்புக்குள்ள ஓடும்..//
எங்கோ ஒரு பெண்மையின் பகுத்தறிவு மின்னல் தெரிகிறதா...
கிராமத்தின் வரலாறு அறிந்த கதாபாத்திரங்கள்.. கிராமத்தின் சோகத்தையும் ..கண்ணீரையும்..காதலையும்..நமக்குணர்த்தும் கதாபாத்திரங்கள்..கிராமத்தின் அவலங்களையும் அந்த கபடமற்ற எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறிஞ்சி வாழும் கதாபாத்திரங்கள்..அவர்களிடம் ஏமாறும் கதாபாத்திரங்கள்..அதை தட்டிக் கேட்கத் துவங்கியிருக்கும் கதாபாத்திரங்கள்..கிராமத்தின் பிரதிநிதிகளாய் வெளி உலகைக் கண்ட கதாபாத்திரங்கள் ...என்று நீண்டு கொண்டே போகும் வரிசை..
குறிப்பிடத்ததக்கது ..கதாபாத்திரங்களின் பெயர்களும் பட்ட பெயர்களும்:_
முதுகெலும்பி..சாமிதாத்தா..முத்தாயி அம்மாச்சி.. பெரிய பாண்டி..சின்னான் ..நீர்குழலி..கொடியாட்டி..மயிலன்...
அடுத்து கதையின் நிகழ்வுகள்..இதில் காதல் உண்டு..கொண்டாட்டங்கள் உண்டு..உறவாடல்கள் உண்டு...
கிராமத்து காதல்..திருமணமாகி புகுந்த வீட்டில் ஏமாற்றத்தை சுமந்து அத்து விட்டவள் என்கிற வாழாவெட்டி பெண் ..அவமானத்தை மறைத்து வாழும் பெண்மை.. முதுகெலும்பி அவளிடம் கொண்ட அதீத காதல்..
கிராமத்து கொண்டாட்டங்கள் ..பொங்கலும் தீபாவளியும் :
//அப்பறம் அன்னைக்கிதா அம்மா தோசை இட்டிலி எல்லாம் சுடும். அப்பறம் அரிசி முறுக்கும்.. அதிரசமும் தின்னுபுட்டு மத்தியானம் 3 மணிக்கா டூரிங் கொட்டாயில போயி நின்னமுன்னா 2 ரூவா டிக்கெட்டு.. உள்ளார நெல்லு சாக்குகட்டி இருட்டாக்கி வச்சிருப்பாய்ங்க... கிழிஞ்ச சாக்குவழி வெளிச்சம் வந்தாலும் அதயெல்லாம் கண்டுக்குறாம மண்ணுமுட்டு குமிச்சி உக்காந்து படம் பாப்பம் பாருங்க.. அதுதெங் தீவாளி எங்களுக்கு... அப்பிடியே ஓடிப்போயிரும் அந்த நாளும்..//
//அப்பறம்.. எங்க பொங்கலு பொதுவா மூணு நாளுங்க. மொதநாளு வீட்டுப் பொங்கலு. அவுகவுக வசதிக்கு தகுந்தாப்புல வெள்ளனையாவோ அந்திக்கோ வைப்போம். புது அடுப்பு வச்சி சாம்பிராணி போடுவம்.. மரவெறகு எல்லாம் இல்ல.வெறும் தென்னம் பாள.. கூராஞ்சி இப்பிடித்தேம் வெறகுக. இல்லன்னா பொங்க பதம் வராது.பொங்கி வாறப்ப பொங்கலோ பொங்கலுன்னு கூவி கொலவை போடுவம். பொங்குன பானைக்கி மஞ்சத்தழ... பிச்சிப்பூன்னு கட்டிவிட்டு எறக்கி.. தலைவாழ மூணு எடுத்து படையலு போடுவம். படையச் சோத்த எடுத்து அடுப்புக்கு...மொதல்ல.. அப்பறமா வீட்டச்சுத்தி நிக்கிற காக்கா குருவிகளுக்கு குடுத்து பொறவுதா எங்களுக்கு. புதுப்பச்சரிசி வெல்லம் போட்டு எறக்கி மெதமான சூட்டோட பொங்கல் அமிர்தமா எறங்கும் பாருங்க. வயிரும் மனசும் சேந்து ஒழைச்சவனுக்கு நெறையிற நேரங்க அது..... ஒழைச்ச பெருமை...
மறுநா வெளுப்புலையே மாடு கன்னுகள ஒட்டிக்கிட்டு கொளம் ஆறுன்னு போவம். அவிங்கள நல்லா வைக்கப் பிரி வச்சி தேச்சிக் குளுப்பாட்டுவம். அதட்டக்கூட மாட்டம். அவுகளுக்கு அன்னைக்கி பூரா கொண்டாட்டந்தேன். கொட்டாச்சிய காவித்தண்ணில நனைச்சி அவுக ஒடம்பு பூராவும் வளையம் வப்பம். கொம்புகளுக்கு கலரு அடிப்பம். இப்படியா கல்யாணச் சோடி கணக்கா சோடிச்சி ஊருக் கெடையில கட்டிப்புடுவம். அவுகளும் எல்லாருமாக் கூடி நலம் விசாரிச்சிக்கிறதாவே படும் எங்களுக்கு. //
சாயங்காலமா ஊருக்கெடைக்கி முன்னாடி ஊருசனம் எல்லாருமா கூடிப் பொங்கவைப்போம். பொங்கி வாறப்ப ஊரு மொத்தம் ஒண்ணாக் கூடி பொங்கலோ பொங்கலு பாடுவோம் பாருங்க.. சந்தோசமுன்னா அங்க நின்னு உணரனும் நீங்கல்லாம். அப்பறம் எல்லாப் பானையில இருந்தும் கொஞ்சம் சோறு எடுத்து மொத்தமா வாழைப்பழம்.. வெல்லக்கட்டி எல்லாஞ் சேத்து பெசஞ்சி உருட்டி மாடுகளுக்கு ஊட்டுவம்.. அப்பறமாதா எங்களுக்கு. இதுக்குப்பேரு ஆயங்கால உருண்டை.. இந்த உருண்ட குடுக்குறதுல பல மொறை கட்டுப்பாடு எல்லாம் இருக்கும். கொஞ்சம் மாறினாலும் கொதிச்சி கலவரமாயிரும். அதுனால வகையா எல்லாருக்கும் பிரிச்சி குடுத்துட்டு அப்பறந்தே எல்லாருக்கும்... அம்புட்டு ருசியா இருக்கும் அந்த உருண்ட... இருக்காம என்ன...? அம்புட்டும் சுத்தமான ஒழைப்புல்ல....!! //
மண்ணின் மணம் கமழும் கிராமத்து பாடல்களின் இனிமையும் இந்தத் தொடரின் முக்கிய அம்சம்..ஒன்று மட்டும் கீழே ஒரு சோறு பதமாய்...
//நல்லானாடே... எந் நல்லானாடே...
நானும் ஓட வாடி ஆடே..
கொல்லைப் பக்கம் கொமட்டிக்காயும்
குருதுச்சந்துல கோவக்காயும்
தங்கம் ஒனக்கு வச்சிருக்கேம்....
தாவி ஓடி கடிச்சித் தின்னு.....//
அடுத்து காலத்தின் மாற்றங்கள்...
பெரிய புரட்சி என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் அந்த அடித்தட்டு மக்களின் வாழ்வின் ஒரு யதார்த்தமான திருப்பத்தை நேரிட வைக்கிறான் மயிலன்...அவனோடு தோள் கொடுக்கும் தோழர்கள்..கிராமத்திலிருந்து நகரம் சென்று படிக்கும் மாற்றம் தொடங்கிய கால கட்டம்..அப்போது இருவகை இளைஞர்கள்தாம் அப்படி வெள்ளியுலகைக் காண்பவர்கள் என்று சொல்லலாம். கிராமத்து பணக்காரர்களின் பணப்பெருமை அறிவிக்க பட்டணம் சென்று கும்மாளம் அடிக்கும் ஒரு வகை...ஏதாவது வகையில் திறமையிருந்து ஊர்க்காரர்களின் உதவியாலோ அல்லது நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி நகரத்தில் பெரிய படிப்பு படிக்க அனுப்பிவைக்கப் பட்ட ஏழை உழவனின் மக்களாகிய இளைஞர்கள் கல்லோரிகளில் முந்தய வகை இளைஞர்களின் கொட்டத்துக்கு பலியாகும் இரண்டாம் வகை...அந்த இரண்டு வகை இளைஞர்கள்தாம் சின்னத்தம்பியும் ஓடு நண்டும்...
நாயகன் முதுகெலும்பி..கடினமான உழைப்பாளி..கண்ணியமான காதலன்..நேரம்வரும்போது பொங்கியெழும் வீரன் ..
பாருங்கள் அநியாயத்தை அவன் தட்டி கேட்கும் விதத்தை;
//அடங்... எங் ஒன்றையணா கொய்யாக்கா.... ஒரு எத்து விட்டேம்னா பல்லு ரெண்டும் தெறிச்சிரும்... நாந் திண்ணைய புடிச்சி நடக்குறப்ப எஞ்................ வேணாம் .. பொம்புள புள்ளைக நிக்கி ... வாயில நல்லா வந்துரும்.... வளந்த பய நீ.......! என்னடா அவெ.. இவெ.... அன்னக்காவடின்னு...ஒங்க வீட்டு பண்ணைக்காரப்பயலுகன்னு நெனச்சியோ...? எனக்கு மொதமொதலா வந்த கோவத்தப் பாத்து அத்தன பெரும் வெறச்சி நிக்க... மயிலம்மட்டும் பக்கத்துல வந்து முதுகுல தட்டிக் குடுத்தாம்//
மயிலான்..அந்த கிராமத்தின் பொருளாதார மாற்றத்தை கொணர முயலும் சிந்தனைவாதி...பாருங்கள்..
// அந்தளவுக்கெல்லாங் கெடையாது கணக்கு....(புள்ள போயிருச்சி இப்ப ) நீங்கல்லாம் வாய்க்கப் பட்டவைங்க..ஒங்கள.. எதுக்க முடியுமா..?ன்னு நக்கலா சொல்லிப்புட்டு.......” எங்க பொருளு... எங்க வெல...அம்புட்டுதேம்..ஒன் ஒரக்கடயில வந்து நா வெல வச்சா நீ சிரிச்சிக்கிட்டே வெத்தலபோட்டு துப்புவன்ன...இங்க.... நா நெல்லு பதம்பாத்து துப்புவெம்...இப்ப அவங் கொரல்ல வெறி ஏறிருந்திச்சி..//
முடிவில் ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தத் தொடர் ஒரு கிராமத்து மணம் முற்றிலும் மாறாத பாமரர்களின் உணர்வுகளை தனது குருதியில் கரைத்து நடமாடும் ஒரு எழுத்தாளன் மட்டுமே இதை படைக்க முடியும். அந்த வகையில் நண்பர் சரவணா இந்த தொடரை நிச்சயமாக அவரது வேர்கள் பதிந்த மண்ணுக்காகவும் அந்த மக்களுக்காகவும் அவர்களது வாழ்க்கையை எழுத்துக்களில் வடிவமைத்து சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்த தொடரின் எதார்த்த நிகழ்வுகளை வாசிக்கும்போது ஜெயகாந்தனும் ஒரு கிராமத்தின் காலமாற்றத்தை சுட்டிக் காட்டும்போது மலையாளத்தின் தகழியும் உங்களுக்கு புலப்பட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை.
வாழ்த்துக்கள் சரவணா...தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்...