என் சலங்கை
நாட்டியம் காணும் போது
நாட்டம் கொள்ளுதே என் மனது
நானும் ஆட விழைகின்றேன்
நாளும் பொழுதும் தவிக்கின்றேன்
கொஞ்சும் சலங்கையின் தீண்டலில்
நெஞ்சம் களித்திடும் ஆடலில்
என்னுயிராய் இருந்தாய் சலங்கையே
எங்கோ மறைந்தாய் நொடியிலே
மணிச்சலங்கையின் சிணுங்கல் கேட்டு
மண்மகளின் மனம் ஆடுது கூத்து
பசியை மறந்து ரசித்தேன் உன்னை - நீ
அசையும் இசையில் மறந்தேன் என்னை
பதம் ஆடும் போது
பக்கம் இருந்தாய் நீயே !
பலம் அளித்து எனக்கு
புகழ் சேர்த்தாய் நீயே !
கனவோடும் கனிவோடும் - உன்னைப்
பதங்களில் அணிந்தேன்
தினந்தோறும் தவறாமல் - உன்னைப்
பணிந்தே தொழுதேன்
சிரம் தாழ்த்தி கரம் கூப்பி
உன்னை ஏந்தியதென் கரங்கள்
பதம் விட்டுப் பிரிந்தாயே
உன்னைத் தேடுது என் கண்கள்
உற்ற தோழியாய் இருந்தாய்
சற்று விலகியே சென்றாய்
என் நடைக்குச் சத்தம் அளித்தாய்
என் மனதில் நித்தம் நிறைந்தாய்
சதங்கையின் ஓசை கேட்டு
சந்தக்குயில் பாடுதே பாட்டு
என் இதய ராகம் கேட்டு
என் ஏக்கத்தை நீ ஓட்டு
`
பொற்சலங்கையின் சந்தமே
பொற்செல்வியின் இன்பமே
பொன்மலரோடு காத்திருப்பேன் - இந்தப்
பெண்பதம் வந்து சேரவே !
- அரங்க ஸ்ரீஜா