பிச்சைக்காரன்

அவன்,
கந்தலான
கச்சைக்காரன் !
சோற்றின் மீது
இச்சைக்காரன் !
சுருங்கச் சொன்னால்
பிச்சைக்காரன் !

அவன்,
ஒவ்வொரு வேளையும்
உணவுக்காக
வெம்புகிறான் !
எப்படியும்
மகேசன்
படியளப்பானென்று
நம்புகிறான் !

அவனுக்கு,
வாழ்வென்பது
காற்றிலாடும்
ஊசல்தான் !
வயிற்றுக்கும்
அவனுக்கும்
அனுதினமும்
பூசல்தான் !
அவன்,
வசிப்பிடம்
ஒரு தேநீர்க்கடை
வாசல்தான் !

அவன்,
ஒரு நாளும்
குளித்ததில்லை !
சோறுண்ண
யாரும் அவனை
விளித்ததில்லை !
வயிறார
அவனும் உண்டு
களித்ததில்லை !.

உடம்பில்
இல்லை
முடம் !
இன்னும்
இருக்கிறது
திடம் !
ஆனாலும்,
உழைப்பு கூடாதென்று
அவனுக்கு ஓர்
அடம் !

தொடக்கத்தில்
அவனும்,
காண்போரிடமெல்லாம்
ஒரு வேலையை
இரந்து பார்த்தான் !
பரிதாபத்தை
பக்குவமாய்க்
கரந்து பார்த்தான் !
கண்ணீரை
கணக்கில்லாமல்
சுரந்து பார்த்தான் !

ஒன்றும்
நடக்கவில்லை !
அதிர்ஷ்ட தேவதை,
அவனைக்
கடக்கவில்லை !
பொங்கியெழுந்த
பிச்சை வேட்கையை
அவனும் பெரிதாய்
அடக்கவில்லை !

உடனே
ஏந்தினான்
கையை !
ஏதோ
நிரப்பினான்
பையை !
ஓரளவு
வளர்த்தான்
மெய்யை !.

எதற்குக்
கிளற வேண்டும்
அதையெல்லாம் !
தேவையில்லை
நடந்து முடிந்த
கதையெல்லாம் !

அது ஒரு
பகல் !
தகித்தது
சூரிய
அகல் !
ஒவ்வொருவரின்
காலடியிலும்
குட்டியாய்
இருளின்
நகல் !

ஓய்வாய்
சற்று அமர
நிழற்குடையொன்றை
நாடிப்போனான்
நமது கதாநாயகன் !

யாரும்
அவனுக்கு
சிவப்புக் கம்பளம்
விரிக்கவில்லை !
காசு கேட்டு
யாரையும் அவன்
அரிக்கவில்லை !
காரணம்
காலையில் உண்டது
கொஞ்சம்
செரிக்கவில்லை !

ஓரிடத்தில்
அமர்ந்தான் !

சுற்றிலும்
பார்த்தான் !

வாங்கித்தாராத
ஏதோ ஒன்றிற்காக
அழும்
ஒரு சிறுவன் !

எதற்கோ
காதலியிடம்
கெஞ்சும்
ஒரு காதலன் !

போகும்
பேருந்தையெல்லாம்
ஏக்கமாய்ப்
பார்க்கும்
படிக்காத
ஒரு கிழவி !

அங்கிருந்த
முதலாளிக்கு
இங்கிருந்தே
அடிபணியும்
ஓர் அலுவலன் !

வாங்கிய கடனுக்கு
சமாதானம் சொல்லும்
ஒரு நடுத்தரன் !

இந்த ரீதியில்
இன்னும் சிலர் ............

நம்மாள்
இப்போது
ஒரு
பீடியைப்
பற்ற வைத்தான் !

புகையை,
ஆழ இழுத்து
நிதானமாய் விட்டான் !

சுகமாகத்தான்
இருந்தது !!!

எழுதியவர் : குருச்சந்திரன் (20-May-15, 8:13 pm)
பார்வை : 311

மேலே