முத்துநகை
.
................................................................................................................................................................................................
முதலாவதாய் வந்த முத்துப் பெண்ணே
வேண்டியது கேளென்றார் ஊரார்..!
“ சில வார்த்தை சொல்ல வேண்டும்
சிந்திக்க, ” என்றாள் முத்துநகை.
“ இதயம் இயங்குகிறது; வாழ்கிறீர்;
தசைகள் சுருங்குகிறது மகிழ்கிறீர்;
இதயத்தின் இயக்கத்தை
தடுக்கவோ தள்ளி வைக்கவோ
மாத்திரை போடுவதில்லையே மானிடர்?
கருப்பை சுழற்சியை மாத்திரம்
கர்மம், சனியன் என்கிறீரே, எப்படி?
அதைத் தொடாதே அங்கே போகாதே
இதைச் செய்யாதே தீட்டு தீட்டு என்பதும்
சுவாமி படமிருக்கு வெளியே போ என்பதும்...!
கருப்பை சுழற்சியை நானா படைத்தேன்?
வெளியே போ என்றது என்னையா? படைத்தவனையா?
அடிப்படை தெரியாமல் அருவருப்பதோ??
எனில்
திருமணத்தையும் முதலிரவையும் கொண்டாடுவது ஏன்?
மாதப்போக்கு வரும்வரை மாரடைப்பு வராது;
படியாது கொழுப்பு ; தேயாது எலும்பு;
வரத்தை சாபமென்று நம்ப வைத்த
வறட்டு ஜாலத்தை என்னென்பேன்?
ஆணின்றி உயிர் பிறக்கும் – க்ளோனிங் !!
பெண்ணின்றி உயிரில்லை- வார்னிங்!
செயற்கை சிறுநீரகம், செயற்கை சுவாசம் கண்டார்
செயற்கை கருப்பை காணாது
செயல் மறக்கின்றார் !
இனியேனும் பெண்ணை
இருட்டு மூலையில் இருத்த வேண்டாம்!
பூரானும் கரப்பும் புரளும்
முரட்டுத் துணி முடிய வேண்டாம்!
உலக்கைத் தடை வேண்டாம் ! உதடு சுழிக்க வேண்டாம் !
கரித்துக் கொட்ட வேண்டாம்... ! ”
அப்படியே என்றனர் சான்றோர்..!
அணங்கு வாழட்டும் ஆரோக்கியமாக....!