மந்திரவாதி

மறைந்தான் மந்திரவாதி மாயமாய்
தெரிந்தான் மீண்டும் அந்திரமாய் – அவன்
தேர்ந்த செயல்திறனை தெரிந்து கொள்ள
தைரியமாக எழுந்து கேட்டான் ஒருவன்

"பறைவாய் இம்மன்றத்தில் தெளிவாய்
மறைந்த முறை மறைக்காது பகர்வாய்"

சிந்தித்தான் மந்திரவாதி சிறிது நேரம்
'செப்புவேன் ஆயின் அதில் சிக்கல் உண்டு
செத்து விடுவாய் நீ கேட்டால் ! சம்மதமா ? '
சலசலப்பு மன்றமதில் : சளைத்தானா நம் ஆள்?

சிரித்தான் அச்சமின்றி : சரி சொல்
'சீக்கிரமாய் ! அதை என் மனைவியிடம் மட்டும் !'

அமர்ந்தோரின் ஆர்பரிப்பு அமர்க்களம்!
ஆயிரம் குரல் அங்கே !அதிர்ந்தது அரங்கம்!
என் சதிக்கு சொல் ! என் பதிக்கும் சொல் !
அடடா ! என்ன ஒரு அவசரம் ! எல்லோருக்கும்!

அவை நடுவே அந்த அவை நடுவே
அழுகைக் குரல் பெண் சிறுமியின் குரல்

"அங்கிள் ! என் அம்மாவுக்கும் சொல்"
அரங்கம் அடங்கியது! ஆச்சரியம் அங்கே!
அங்கலாயித்தான் மந்திரவாதி
"அம்மா செத்துவிடுவாள் அதுவா வேண்டும் ?"

அழுகை நிறுத்தி சொன்னது அக்குழந்தை
"அம்மா தான் செத்து விட்டாளே! மறைந்த
அவள் உன் போல் மீண்டும் தெரியனும்
அங்கிள் ! ப்ளீஸ் என் அம்மாவுக்கும் சொல் !"

எழுதியவர் : முரளிதரன் (23-May-15, 12:49 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 87

மேலே