மீண்டிடுமா மனிதமும்
புனிதபூமி புனிதபூமி
புவியில் நம்நாடு என்கின்றனர் ...
மனிதன் உள்ளான் ஆனால்
மனிதம் மறைந்து விட்டதே ....
என்கிறேன் நான் ......
இல்லாமை இருகரம் ஏந்தி நிற்கிறது
பொல்லாமை பொய்வேடம் போடுகிறது
தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது
காழ்ப்புணர்ச்சி கடையில் விற்கபடுகிறது
பகையுணர்ச்சி பம்பரமாய் சுழல்கிறது
சாதிமத உணர்ச்சி சாலைகளில் திரிகிறது
புறம்பேசும் மக்கள் புகழின்உச்சியில்
பொய்பேசும் மக்கள் கோட்டையில்
அகமிலா ஆட்களோ அகிலத்தில்
வஞ்சகமோ நெஞ்சத்திலே தஞ்சம்
லஞ்சமோ கோடிகளாகி மஞ்சத்தில்
பஞ்சமோ நிலையானது பாமரனுக்கு
நடுத்தரமும் ஏழ்மையாகிறது நாட்டிலே
ஏழைகளின் எண்ணிக்கையோ ஏறுமுகம்
மக்களின் துயர்களோ வானைமுட்டுகிறது
மீண்டிடுமா மனிதமும்
கண்டிடுவோமா மனிதனை
மலர்ந்திடுமா மகிழ்ச்சியும்
நிலைத்திடுமா நலமும் வளமும்
வென்றிடுமா நம் சமுதாயமும் .....
பழனி குமார்
22.05.2015