அன்பின் மொழி எது

முதல்முறை வெளிநாட்டுப்பயணம்.
நாட்கள் இருப்பு குறைந்து
மணித்துளிகள் இருப்பே மீதம் உள்ளது.
நாடோடிப் பயணத்திற்கு
என் பொதிகள் தயார் நிலையில்.
ஆசிர்வாதம் வாங்கையில்
திருநீறை பூசிவிட்டு
நல்லபடியா போய் வாவென
சொல்லிக்கொண்டே
முந்தானை முடிச்சுகளை அவிழ்த்து
கசங்கிய பணம் தந்தாள்
செலவுக்காக அம்மா.
அறைக்குள் அழைத்த என் மனைவி
கண்ணீரோடு கட்டியணைத்து
காதோரம் கேட்டாள்
கண்டிப்பாக போகவேண்டுமா என்று
சிரித்த முகத்தோடு
பேனா பரிசளித்தாள் தங்கை
இந்த வருசத்தோட உன் கடன் தொலஞ்சிரும்
போய்டு வாயென
கண்ணீரை அடக்கிக்கொண்டே
அக்கா சொன்னாள்.
கழுத்தினை கட்டிக்கொண்டு
முத்தம் தந்தான் அக்கா மகன்.
பேருந்து படிகளில் ஏறியபோது
பேருந்து கண்ணாடி சொல்லியது
அப்பாவின் கை அசைப்புகளையும்
கண் ஈரத்தையும்.
திருநீறோடு கசங்கிய பணம்,
அணைப்புகளோடு முத்தம்,
சிரிப்போடு பரிசு,
கண்ணீரை அடக்கிக்கொண்டே வாழ்த்து,
கழுத்தினை கட்டிக்கொண்டே கன்னத்து முத்தம்,
கை அசைப்புகளுடன் கண்ணில் ஈரம்.
இந்த பாழாய் போன அன்புக்கு
எத்தனை முகங்கள்!!.....
எத்தனை மொழிகள்!!....