அழகானது

வனைந்த கலயமும் உடைந்த நிலையென
வானிற் பிறைநில வேக
முனைந்து மறைமுகில் இருண்ட குறைதர
உருண்டு மதிவெளி யோட
நனைந்த குளமலர் விரிந்த மலரல்லி
நினைந்து மகிழ்வினி லாட
வினைந்த எழிலிலும் புனைந்த தமிழ்க்கவி
விளங்கும் அழகழ கன்றோ

தனிச்சு கம்தரும் இனித்த மிழ்வழி
இறைந்த ஏடுகள் கற்றே
பனிக்கு ளிர்தனில் மதுக்கொ ளும் மலர்ப்
படுக்கையமர் வண்டாகி
நனிச்சுவை தமிழ் இழைத்த கவிதனை
நினைத்துப் படித்திட வென்றே
இனிச்சை கொளுமனம் இயற்கையின் வரம்
எடுத்த உணர் வழகன்றோ

கனிந்த மரமதி லிருந்த குயில்தனும்
கிளர்ந்த மகிழ்வொடு கூவ
நனைந்த நறுமண மெழுந்த மலர்வன
மிருந்து தென்றலுமோட
குனிந்த கதிர்களும் நிறைந்த கழனியில்
குலவக் கலகலத் தாடும்
முனைந்து சுவைதரப் பிறந்த கவிதைகள்
மேன்மை அழகழகன்றோ

விளைந்த தாமரை விடிந்த வேளையில்
வெளுத்து வானடி காண
குழைந்தை கையிடை அளைந்த குங்குமம்
குழைத்துப் பூசிய தாக
நெளிந்த முகில்தனும் சிவந்து வானடி
எழுந்த ஆதவன் போற்ற
தழைந்த எழில்தனும் திளைந்த மனமகிழ்
தரினும் தமிழ் அழகன்றோ

இழைத்த வலியொடு திகழ்ந்த வீரமும்
எடுத்த தமிழ் மற வீரர்
நுழைந்த துயர்தனை நிறுத்தித் தமிழெனும்
நிறைந்த வளம்தனைக் காக்க
எழுந்தும் ஒருமுகம் இழைந்த பொழுதினில்
இறைமை தமிழ் வலி கொன்றார்
இழந்த உரிமையை எடுக்கும் நாளது
என்று மழகழ கன்றோ

எழுதியவர் : கிரிகாசன் (25-May-15, 4:31 pm)
பார்வை : 114

மேலே