போதைப்பொருள் ஒழிப்பு தின கவிதை

🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷

*போதைப்பொருள்*
*ஒழிப்பு தினக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷


போதைப்பொருள் மரத்தில்
உரியவர்கள்
கிளைகளை வெட்டுவதற்கு
முயற்சி செய்கின்றனர்....
இல்லை இல்லை
'பாவனை' செய்கின்றனர்...
இவர்கள்
'வேர்களை வெட்டுவது எங்கே?'

பகலில் கிளைகளை
வெட்டுபவர்கள்' தான்
இரவில்
அதற்கு 'நீர் ஊற்றுகின்றனர்... !''

காவலர் என்னும்
நுனிக்கரும்பும்......
மக்கள் என்னும்
இடைக்கரும்பும்.....
அரசு என்னும்
அடிக்கரும்பும்.....
கட்டோடு இருந்தால்....
போதை பொருள்களை
உருவாக்கும் எறும்பும்
விற்பனை செய்யும் எறும்பும்
பயன்படுத்தும் எறும்பும்
என்ன செய்து விட முடியும்...?

போதைப் பொருள்களை
'பெட்டியாக விற்பவனை'
கடத்தல்காரன்
கொள்ளைக்காரன்
தேசத்துரோகி என்று
சொன்னால்
'பெட்டிக்கடையில் விற்பவனை '
என்னவென்று சொல்வது ?

பத்திரிக்கையாளருக்கும்
மாணவர்களுக்கும்
குடிகாரனுக்கும்......
கள்ளச்சாராயம்
கஞ்சா அபின் விற்கும் இடம்
தெரியும் போது
'காவலர்களுக்கும்
அரசுக்கும் மட்டும்
தெரியாமல் போனது எப்படி?'
ஓ......!!!.
"முன்னால் திறந்திருக்கும்
பணப்பெட்டி
மறைத்திருக்குமோ....?'

மது ஆலைகளை
பீடி சிகரெட் ஆலைகளை
திறந்து வைத்து
விழா கொண்டாடும் அரசு....
மது குடிக்கும்
புகை பிடிக்கும்
'வாய்க்கு பூட்டு போடு' என்று
அறிவுரைச் சொல்லவும்
விழா எடுக்கும்....
அப்படியொரு பொறுப்பான அரசு....!!!

மக்களே!
காவலர்களையோ
அரசியல்வாதிகளையோ
நம்பும் வரை
நீங்கள் நல்லா வாழவே முடியாது....
உங்களை
நீங்களே நம்புங்கள்....
உங்களை நீங்களே
வழிநடத்துங்கள்
வேறு வழியே இல்லை.....!!!

போதை வேண்டுமென்றால்
மதுவைத் தேடி போகதே !
மனைவியைத் தேடி போ....
மாதுவில்
இல்லாத போதையடா
மதுவில் இருக்கிறது மடையா ?

மன அமைதி
வேண்டும் என்றால்
கஞ்சாவை கையில் எடுக்காதே!
'கைக்குழந்தையை'
எடுத்துப்பார்
அமைதி என்ன ?
ஆனந்தமே வரும்....!

இசையில்
இல்லாத பரவசமா ?
இலக்கியங்களில்
இல்லாத நவரசமா ?

விளையாட்டில்
இல்லாத விறுவிறுப்பா ?
உடற்பயிற்சியில்
இல்லாத சுறுசுறுப்பா ?

நட்பில் இல்லாத
பொழுதுபோக்கா ?
வாசிப்பில்
இல்லாத இன்பமா ?

கலவியில்
இல்லாத உச்சமா ?
காதலில்
இல்லாத சுகமா ?

'வாழ வைக்கும் போதைகள்'
ஆயிரம் இருக்க
இவர்கள்
'சாக வைக்கும் போதைக்கு
அடிமையாகியே சாகின்றனர்...!!

மக்களே !
நீங்கள் மிகவும்
விழிப்போடு செயல்படா விட்டால்
உங்களை
நீங்களே கூடக்
காப்பாற்றிக் கொள்ள முடியாது...
ஏனெனில் .....?
உங்களுக்கு
"எதிரிகளை"" விட
"பச்சைத்துரோகிகளே " அதிகம்.....!!

*கவிதை ரசிகன்*


🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (26-Jun-24, 6:14 pm)
பார்வை : 142

மேலே