தன்மானம்

உடனடி இலாபத்திற்கு
உரிமையைத் தாரை வார்ப்பார்
தொலை நோக்குப் பார்வையில்லா
அடித்தட்டுத் தன்மானிகள்.

அரைகுறையாய்ப் படித்த
‘அறிஞர்’ பெருமக்கள்
சுயலாபம் பெருக்க
கொத்தடிமைகளாய் இருந்து
குற்றேவல் புரிவதோடு
உருண்டும் புரண்டும்
போலி பக்திக்கு
விளம்பரம் தேடுவார்.

உண்மையில் கற்றவர்கள்
வன்முறை பழிவாங்கல்
தொடர்கதை ஆகுமென்பதாலும்
எப்போதவது தான்
வாய்மை வெல்லும் என்பதாலும்
உண்மையைப் பேச அஞ்சி
ஊமைகளாய் மாறிடுவர்.

எதையும் சாதிக்கும்
சர்வ வல்லமை பெற்ற
சக்தியெல்லாம்
ஓரணியில் நிற்கும் போது
சிதறிக் கிடக்கும் பெரும்பான்மை
வேண்டுதலுக்கு உடைத்த
தேங்காயாய் பொறுக்கலுக்குக்
காத்திருக்கும் பொது இடங்களில்.


புதுமைக் கவிஞரும்
புரட்சிக் கவிஞரும்
நம்மிடை இன்றிருந்தால்
ஆசுகவி காளமேகம் போல்
அரிகண்டம் பாடுவாரா
எமகண்டம் பாடுவாரா
யாருக்குத் தெரியும்!

எழுதியவர் : மலர் (30-May-15, 10:51 am)
பார்வை : 563

மேலே