மாதவி

மாதவி
என்ற பெயர்
இருப்பதாலேயே
மாதம் தவறாமல்
பதம் பார்க்க
வந்து போகிறார்கள்

தேய்த்துப் பார்த்தவர்கள்
வாங்க மறுக்கிறார்கள்
வெறும் அங்கம் தானே
தங்கம் இல்லையே
வீட்டுக்கு கொண்டு போக

பெயரை விட்டு
என்னை
பெயர்க்க முடியாவண்ணம்
என்னை
பெற்றவள்
பெற்று தந்து விட்டால்
விற்று
விட்டு
போய்விட்டால்

விட்டுப் போக மறுக்கும்
வந்தவன் எல்லாம்
கோவலன் தான்
ஆனால்
கண்ணகியை மட்டும்
காணோம்

ஒருமுறை
மீண்டும் எரிந்தால்
ஒவ்வொரு முறையும்
நான் எரியாமல்
மீண்டு விடுவேன்

என்னைப் பாட்டில்
வைப்பதாய்
பக்கத்து தெரு
இளங்கோ வந்தான்

இரவோடு இரவாக
அவனும்
படுத்து எழுந்தான்
படித்து தெளிந்தவன்
விட்டுச் சென்றது
வைக்க முடியா
வைப்பாட்டி

என் வீடு மட்டும்
காமத்தை கொட்டும்
காடானதும்
அதில் வாழும் நான்
சடலம் அல்ல
சகலத்தையும்
சத்தமின்றி சகிக்கும்
சவம்
என்னும் வரத்தை
எனக்கு
வாங்கித் தந்தது யார்?

அள்ள அள்ள
குறையாத
அமுத சுரபி தான்
நான் பலருக்கு
ஆனால் தெருவுக்கு வந்தால்
ஏதோ
வினோத வியாதி போல்
என்னை பார்ப்பதும்
பரப்புவதும் ஏனோ

வீதி எனக்கில்லை
என்னும் விதி
என்னுடையது

விடியலே இல்லா
வெறும் இரவு
நான்

பேச முடியா
பேச்சிருக்கும் ஊமை
நான்

என்னை
வச்சிக்க விரும்புவார்கள்
ஆனால்
மெச்ச விரும்பமாட்டார்கள்
எச்சில் இலை என்பார்கள்
என்னை
ஆனால்
வாரம் ஒரு முறை
வந்து
அதில் சாப்பிட்டு போவார்கள்
சாகத் தெரியாதவர்கள்

எனக்கு மணிமேகலை
பிறக்கப் போவதில்லை
இன்னொரு
மாதவி
எனக்குள் நிச்சயம் இல்லை

ஆனால்
மாதவி பிறந்துவிடுவாளோ
என்றே
என்னை முடித்துக்கொள்ள
முடிந்து கொண்டிருக்கிறேன்..!

எழுதியவர் : Raymond (30-May-15, 5:54 pm)
Tanglish : mathvai
பார்வை : 241

மேலே